ஈராக்கின் வடக்கிலிருக்கும் குர்தீஷ் அகதிகள் முகாமொன்றைத் தாக்கி மூவரைக் கொன்றது துருக்கி.
மக்மூர் என்ற ஈராக்கிய நகரிலிருக்கும் அகதிகள் முகாமில் 1990 களில் துருக்கியிலிருந்து அகதிகளாகப் புலம்பெயர்ந்த குர்தீஷ் மக்கள் தங்கியிருக்கிறார்கள். அந்த முகாமிலிருந்து திட்டமிட்டு துருக்கியின் மீது ஆயுதத் தாக்குதல்களைக் குர்தீஷ் இயக்கத்தினர் நடாத்தி வருவதாக துருக்கிய ஜனாதிபதி எர்டகான் குற்றஞ்சாட்டியிருந்தார்.
“ஐ.நா-வின் அகதிகள் அமைப்பு அந்த முகாம் தீவிரவாதிகளால் பாவிக்கப்படாமல் கவனிக்காவிடில் நாம் அதைச் சுத்தப்படுத்த வேண்டியிருக்கும்,” என்று எர்டகான் எச்சரித்திருந்தார்.
குர்தீஷ் மக்களுடைய பாடசாலைகள், சமூகங்கள் இருக்கும் அந்த முகாம் தாக்கப்பட்டதில் இறந்தவர்கல் மூவர் சாதாரண மக்கள் என்கிறார் மக்மூர் நகரப் பாராளுமன்ற உறுப்பினர் ரஷாத் கலாலி. காற்றாடி விமானங்களால் அப்பகுதியைத் தாக்கிவரும் துருக்கிய இராணுவம் பாலர் பாடசாலையை அடுத்துக் குண்டுகளைப் போட்டதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்