புர்க்கினோ பாஸோவில் ஒரு கிராமத்தைத் தாக்கிய இஸ்லாமியத் தீவிரவாதிகள் குழு சுமார் 138 பேரைக் கொன்றது.

சுமார் ஆறு வருடங்களாக புர்க்கினோ பாஸோ என்ற குட்டி ஆபிரிக்க நாட்டிலும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல் பரவலாக நடந்து வருகிறது. ஸகெல் பிராந்தியம் என்றழைக்கப்படும் இப்பகுதியில் பக்கத்திலிருக்கும், நைகர், மாலி ஆகிய நாடுகளும் அல் – கைதா, ஐ.எஸ் ஆகிய தீவிரவாதக் குழுக்களின் கிளைகள் என்றழைக்கப்படும் தீவிரவாதக் குழுக்களின் தாக்குதலுக்கு ஆளாகி வருவது சாதாரணமாகிவிட்டது.

ஸொல்கான் என்ற கிராமத்தைத் தாக்கியிருக்கும் தீவிரவாதக் குழுவொன்று அங்கிருப்பவர்களை விரட்டியடித்து, வீடுகளுக்குத் தீவைத்து எரித்திருப்பதாக அரசு அறிவிக்கிறது. வீதிகளில் ஆங்காங்கே இறந்த உடல்கள் கிடப்பதாகவும் இதுவரை காணப்பட்ட இறந்தவர்களின் எண்ணிக்கை 138 என்று புர்க்கினோ பாஸோ அறிவிக்கிறது. நாட்டின் ஜனாதிபதி மார்க் கிரிஸ்டியான் காபொரே நடந்ததைக் கடுமையாகக் கண்டித்திருப்பதுடன் நாடு முழுவதும் மூன்று துக்க நாட்களை அறிவித்திருக்கிறார்.

புர்க்கினோ பாஸோவில் நடந்துவரும் தீவிரவாதிகளின் தாக்குதலால் சுமார் ஒரு மில்லியன் பேர் இதுவரை நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்திருக்கிறார்கள். தவிர, பக்கத்திலிருக்கும் மாலியில் நடாத்தப்படும் தாக்குதல்களால் 20,000 பேர் ஏற்கனவே வறிய நாடான புர்க்கினோ பாஸோவுக்குள் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். நேற்றைய தினம் நடந்திருக்கும் இந்தத் தாக்குதலுக்கான பொறுப்பை இதுவை எந்தக் குழுவும் எடுத்துக்கொள்ளவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *