பன்னாட்டு நிறுவனங்கள் மீது ஒரேவிதமான வரிகளை விதிப்பது பற்றி உலகின் ஏழு பணக்கார நாடுகள் ஒன்றிணைந்து முடிவெடுத்திருக்கின்றன.

தொலைத்தொடர்பு, டிஜிடல் தொழில்நுட்பங்களின் சமீபகால, மிகப்பெரிய வளர்ச்சிகளுக்கு ஈடாக நாடுகள் தத்தம் வரிவிதிப்புகளில் நுட்பங்களில் முன்னேறவில்லை. அப்படியான நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களாக இருப்பதால் எந்தெந்த நாட்டில், எந்தெந்த அளவுக்கு வருமானம் ஈட்டுகின்றன, முதலீடுகளைச் செய்கின்றன, இயங்குகின்றன போன்றவைகளைத் தெளிவாக அறிந்துகொள்வதில் சர்வதேசத்தின் முன்னேறிய நாடுகளாலும் முடியவில்லை. அந்தந்த நாடுகளில் அவர்களுக்கான வரிகளை அதனால் தெளிவாகக் கணக்கிட்டு அறவிட முடிவதில்லை. அந்த நிலையை மாற்றுவதற்கான முதல் படியே தற்போது ஜி 7 நாடுகளின் பொருளாதார அமைச்சர்கள் சந்தித்த மாநாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது.

“இது ஒரு சர்வதேச ரீதியான வரிச் சமத்துவ நடவடிக்கை. இது நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி, ஆனால், மக்களுக்குச் சேர வேண்டிய வரிப்பணத்தை மறைத்துவைக்கும் நிறுவனங்களுக்கும், அப்பணத்தைத் தமது நாட்டின் கணக்குக்காட்டாத வங்கிக்கணக்குகளிலும் சேர்த்துவைக்கும் நிறுவனங்களுக்கும் ஒரு மோசமான செய்தி,” என்று ஜேர்மனியின் வர்த்தக அமைச்சர் உலொவ் ஷொல்ட்ஸ் குறிப்பிட்டார்.

பிரிட்டனின் பொருளாதார அமைச்ச்சர் சிஷி சுனாக்,”உலகின் தொழில்நுட்ப நிறுவனங்கள் நேர்மையாகத் தமது வருமானத்தின் பங்கைச் செலுத்தவேண்டும், என்ற நோக்கம் இந்த முடிவின் பின்னால் இருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கனடா, பிரிட்டன், ஜேர்மனி, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்கள். தமது நாட்டில் செயற்படும் நிறுவனங்களின் மீது 15 % வரியை அறவிடுவது என்ற முடிவை எல்லோரும் சேர்ந்து எடுத்திருக்கிறார்கள். வரும் மாதங்களில் நடக்கவிருக்கும் ஜி 20 நாடுகளின் மாநாட்டில் எல்லாரும் சேர்ந்து இதே முடிவை ஏற்றுக்கொள்வதென்று திட்டமிடப்பட்டிருக்கிறது.

சர்வதேச ரீதியில் முதல் தடவையாக முக்கிய நாடுகள் எடுத்திருக்கிம் இந்த வரிவிதிப்பு நடவடிக்கையை ஒக்ஸ்பார்ம் அமைப்பு வெறும் கண் துடைப்பு என்று விமர்சிக்கிறது. ஏற்கனவே தங்கள் நாடுகளுக்குப் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்காகப் பாவிக்கப்படும் 15 % விகிதத்தை எல்லாரும் சேர்ந்து அறிவித்திருப்பதன் மூலம் பெரிய வித்தியாசங்களெதுவும் நடந்துவிடப்போவதில்லை என்பதே அந்த அமைப்பின் கணிப்பு.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *