இந்தக் கோடைகாலப் பயணத்தில் விமான நிலையங்களில் ஒருவர் 8 மணி நேரங்கள் அலைக்களிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
ஐரோப்பியக் குடிமக்களில் ஒருசாரார் குகைக்கூடாக வெளிச்சம் தெரிவதாக நம்பிக் கோடைகாலப் பயணங்களுக்கு மீண்டும் தயாராகிவிட்டார்கள். பல ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது விமானப் பயணச்சீட்டுகள் வாங்குதலில் மிகப்பெரும் உயர்வு ஏற்பட்டிருப்பதாக சுற்றுலாத் துறையினர் ஆர்ப்பரிக்கிறார்கள். அதே நேரம், அதன் விளைவுகளைப் பற்றிய பயண எச்சரிக்கை விளக்குகளும் எரிகின்றன.
இவ்வருடக் கோடைப்பயணக் காப்புறுதிகள் பெரும்பாலும் பயணிகளின் பொறுப்பையே முன்னிலைப்படுத்துகிறது என்பது ஒரு முக்கிய எச்சரிக்கை. அத்துடன் விமான நிலையங்களில் ஏற்படப்போகும் கூட்டத்தை நேரிட அவை தயாரா என்பதும் சிந்தனைக்குரியது. கொவிட் 19 க்கு முன்னரைப் போலன்றி இந்தக் கோடையில் விமான நிலையக் கெடுபிடிகள் வித்தியாசமாக, அதிகமாக இருக்கும் என்கிறார்கள் விமான நிலைய நிர்வாகங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் பலர்.
2019 வரை வழக்கமான பயணச்சீட்டுப் பதிவு, பயணப்பெட்டிகளைக் கையளித்தல், பாதுகாப்புக் காவல்களைக் கடத்தல், பயணக்கடவுச்சீட்டு, அனுமதிப்பத்திரங்களைப் பதிதல் போன்றவைகளைத் தவிர புதியவை சில புகுந்துள்ளன. விமான நிறுவனங்கள் பயணிகளின் உடல்சூட்டை ஆராய்ந்து, பயணத்துக்குரிய ஆரோக்கியச்சீட்டுகளைக் கண்காணித்தல் தற்போது கட்டாயமாகியிருக்கிறது.
இந்த நிலையில் விமான நிலையங்களில் ஒரு பயணி விமானத்துக்குள் ஏறமுதல் செலவிடும் சமயம் 2019 உடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்காகியிருப்பதாக சர்வதேச விமானப் பயணிகளின் அமைப்பு (IATA), கடந்தவாரம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த நிலைமை ஏற்படும் அதே நேரம் விமானப் பயணமானது கொவிட் 19 க்கு முன்னிருந்த நிலைமையுடன் ஒப்பிடும்போது 30 விகிதத்தையே எட்டியிருக்கிறது.
விமான நிலையங்களின் கூட்டமைப்பின் கணிப்புப்படி கொவிட் 19 க்கு முன்னிருந்த நிலைமையின் 75 விகிதத்துக்கு விமானப் பயணங்கள் நெருங்கும்போது விமான நிலையங்களில் ஒரு பயணி சுமார் 5.30 மணியைச் செலவிடவேண்டியிருக்கும். ஆனால், ஐரோப்பாவில் கொவிட் பரவல்கள் எதிர்பார்ப்பது போலக் குறையுமானால் இவ்வருட ஓகஸ்ட் மாதமளவில் விமானப் பயணங்கள் கொவிட் 19 க்கு முன்னிருந்ததை விட பாதியளவாகவே இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்