டிஸ்னிலாண்ட் போலாகிவிடக்கூடதென்று முன்பு பயந்த புருக்கெ மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்காக ஏங்குகிறது.
பெல்ஜியத்திலிருக்கும் 120,000 மக்கள் தொகையைக் கொண்ட நகரமான புருக்கெ ஐரோப்பாவின் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மிக முக்கிய நட்சத்திரமாகும். ஆனால், அளவுக்கதிகமான சுற்றுலாப்பயணிகளால் மூழ்கிவிட ஆரம்பித்ததால் அந்த நகரத்தினர் அங்கே வருபவர்களை எப்படிக் குறைப்பதென்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். 2019 இல் அதன் நகரபிதா அங்கே வரும் பயணிகள் கப்பல்களைக் குறைக்கலாம் என்று பிரேரித்திருந்தார்.
கொரோனாக் காலம் வந்தது, தொற்றுக்கள் பரவின. விளைவாக மற்றும் பல சுற்றுலா நகரங்கள் போலவே புருக்கெயும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்த உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், தவறணைகள் உட்பட்ட பல துறைகளும் காய்ந்து போயிருக்கின்றன. நகரின் மிகப் பிரபலமான பண்டைக்கால நகரமும் அதைச் சுற்றியிருக்கும் கோட்டை போன்ற பகுதிகளிலும் சுற்றுலாவுக்கு வருபவர்கள் எவருமில்லை. தொற்றுக்கள் குறைந்து வர ஆரம்பித்திருக்கும் தருணம் “மீண்டும் எப்போ வருவார்கள் சுற்றுலாப் பயணிகள்,” என்று தவிக்கின்றன இத்துறைகள் என்று தெரியவருகிறது.
தற்போதைய நிலைமையில் பெல்ஜிய மக்கள் மட்டுமே புருக்கெ நகருக்கு விஜயம் செய்கிறார்கள். நகருக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது எப்படியென்று திட்டங்கள் போட ஆரம்பித்திருக்கிறது நகரசபை. கட்டுப்படுத்தவேண்டுமென்று திட்டமிடப்பட்ட கப்பல் பயணிகளை ஈர்த்து அங்கே அதிக நாட்கள் தங்கவைக்க 50 எவ்ரோக்களை இலவசமாகக் கொடுத்து நகரின் மற்றைய பகுதிகளுக்கு ஈர்க்கத் திட்டமிடுகிறார்கள் சுற்றுலாத் துறையினர்.
இம்மாதத்தில் ஐரோப்பிய நாடுகள் அறிமுகப்படுத்தவிருக்கும் கொவிட் 19 தடுப்பூசி பெற்றவர்களுக்கான சான்றிதழ் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் பல ஐரோப்பியர்களும் அதிக கட்டுப்பாடுகளின்றிப் பயணிக்க முடியும் என்பதால் புருக்கெயிலும் அவர்களைத் தயக்கமின்றி வரவேற்கலாம் என்று நகரத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
சாள்ஸ் ஜெ. போமன்