உலக நாடுகளின் குற்றவியல் அமைப்புக்கள் ஒன்றுசேர்ந்து சர்வதேசக் குற்றவாளிகள் பலரை ஒட்டுக்கேட்டுக் கைதுசெய்தன.
யூரோபோலும், அமெரிக்க, ஆஸ்ரேலிய மற்றும் தென்னமெரிக்க, ஆசிய, மத்தியகிழக்கு நாடுகளின் பொலீஸ் அமைப்புக்கள் பலவும் சேர்ந்து திங்களன்று உலகளாவிய ரீதியில் குற்றவாளிகள் பலரைக் குறிவைத்துத் தேடிக் கைதுசெய்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 க்கும் அதிகமானது என்று குறிப்பிடப்படுகிறது.
சர்வதேச ரீதியில் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தொழில்நுட்பத்தில் நுண்ணிய கருவிகளைப் பல வகைகளிலும் பாவிப்பதால் பொலீசார் வீசும் வலைகளில் மாட்டுப்படாமல் தப்பிவிடுகிறார்கள். குற்றங்களுக்காகத் திட்டமிடுதலில் அவர்கள் ஈடுபடும்போது சம்பாஷனைச் செயலிகளை அவர்கள் பாவிப்பதுண்டு. ஆனால், அந்தச் செயலிகளைப் பொலீசாரால் கண்காணிக்க முடியாத நிலைமை நீண்ட காலமாக இருந்துவந்தது. அவற்றில் குற்றத்துக்குத் திட்டமிடுபவர்கள் தமக்குள் பேசிக்கொள்வதை ஓரளவு அறிந்தாலும் அதை நீதிமன்றத்தின் முன்னால் நிரூபிக்க ஆதாரமிருப்பதில்லை.
அந்த நிலையை மாற்றுவதில் சமீபத்தில் வெவ்வேறு நாட்டின் உள்துறை தொழில்நுட்ப வல்லுனர்களும் வெற்றியடைந்து வருகிறார்கள். அப்படியான ஒரு முக்கிய வெற்றியே சர்வதேச ரீதியில் பல குற்றவாளிகளை ஒரே நேரத்தில் வெவ்வேறிடங்களி கைதுசெய்ய உதவியதாகக் குறிப்பிடப்படுகிறது.
சர்வதேசக் குற்றவாளிகள் தமது தொலைபேசிகளில் மாற்றங்கள் செய்து அதில் ”AnoM” என்ற இரகசிய உரையாடலுக்கான செயலியைப் பொருத்திப் பாவித்து வந்தார்கள். அந்தச் செயலிக்குள் புகுந்த பொலீசாரின் உளவுத்துறை அதில் பேசிக்கொள்பவர்களையும் அவர்களின் திட்டங்களையும் நீண்டகாலமாகவே சர்வதேச பொலீஸ் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து கண்காணித்தார்கள். அதில் வெளியாகிய விபரங்களை வெவ்வேறு நாடுகளும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டிருந்தன.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை மருந்துகள் போன்றவைகள் கடத்துதல் போன்ற பலவித குற்றங்களுக்குத் திட்டமிடும் சுமார் 25 மில்லியன் செய்திகளை ஒட்டுக்கேட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பொலீசார் ஜூன் 7 ம் திகதி திங்களன்று ஒரே சமயத்தில் எல்லா நாடுகளிலும் தமது வேட்டையை ஒரே நேரத்தில் நடத்தினார்கள். இதன் மூலம் கைதுசெய்யப்பட்டவர்கள் 800 க்கும் மேற்பட்டவர்களாகும்.
“திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிரான மிகப்பெரிய வெற்றி”, “சர்வதேசக் குற்றவாளிகளுக்கு ஒரு பலமான அடி” என்று இந்தக் கைதுகளையும், ஒன்றுசேர்ந்த பொலீஸ் வேட்டையையும் பற்றி வெவ்வேறு நாடுகளில் பத்திரிகையாளரைச் சந்தித்த உள்துறையினர் பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதன் மூலம் பல மில்லியன்கள் பெறுமதியான போதைப்பொருட்கள், மிகப்பெரிய அளவில் ஊழல் பணம் போன்றவைகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அத்துடன் திட்டமிடப்பட்டிருந்த பாரதூரமான பல குற்றச்செயல்களும் தடுக்கப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்