“பசுமையான, சமத்துவமான, பெண்மையான ஒரு உலகம் செய்வோம்,” போரிஸ் ஜோன்சன்
பிரிட்டனின் கோர்ன்வால் நகரில் கொவிட் 19 பெருவியாதி ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக உலகின் ஏழு பணக்கார நாடுகள் சந்தித்துக்கொள்ள அவர்களை வரவேற்றார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன். ஜி 7 நாடுகளின் தலைவர்களை அவர் வரவேற்றுப் பேசியது வழக்கத்தை விட ஒரு வித்தியாசமான செய்தியாக இருந்தது என்று கவனிக்கப்படுகிறது.
“கொரோனாத் தொற்றுக்களிலிருந்து நாம் வெளிவரும்போது முன்னரை விட சமத்துவமான, பசுமையான, பெண்மையான ஒரு உலகத்தை நாம் கட்டியெழுப்பவேண்டும்,” என்று பிரதமர் ஜோன்சன் குறிப்பிட்டார். அத்துடன் உலக நாடுகளெல்லாவற்றுக்கும் மிக விரைவாகக் கொவிட் 19 தடுப்பு மருந்து கிடைக்கும்படி செய்யவேண்டும் என்ற எண்ணமும் அவரது பேச்சில் தொனித்ததைக் காணமுடிந்தது.
பிரான்ஸின் ஜனாதியுடன் வந்திருந்த உயர்மட்டத் தலைவர்கள் அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் ஆபிரிக்காவின் 60 விகிதமானவர்களுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்து கிடைக்கச்செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.
இன்று ஆரம்பித்திருக்கும் இந்த மாநாட்டின் முக்கிய பேசுபொருட்களாக கொவிட் 19 க்கு எதிரான போர், தடுப்பு மருந்துகளை உலகளாவிய அளவில் கிடைக்கச்செய்தல், சுற்றுப்புற சூழல் பேணிக் கால நிலைமாற்றத்துக்குத் தடைக்கல் போடுதல் ஆகியவை அமையும். அதைத் தவிர உலகின் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு ஒவ்வ நடக்கும் இந்த நாடுகள் எப்படி ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் உலக அரங்கில் தமது சர்வாதிகாரப் போக்கில் நடப்பதை எதிர்நோக்கவேண்டும் என்பது பற்றியும் தலைவர்களுக்கிடையே உரையாடப்படும் என்று தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்