மேற்கு ஆபிரிக்காவில் பிரான்ஸின்”ஒப்பரேஷன் பார்கேன்” போர் முடிவு ஜிஹாத்தை எதிர்க்க இனி புது உத்தி.
பிரான்ஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கு ஆபிரிக்காவில் நடத்திவந்த போரில் முக்கிய உத்தி மாற்றங்களை அறிவித்திருக்கிறது.
அதன்படி மாலி, புர்கினோ பாசோ, மொறிட்டேனியா, சாட், நைகர் ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கிய சாஹல் பிராந்தியத்தில் (Sahel Region) தனது படைத்தளங்களை அகற்றி அங்கு கடந்த எட்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த “ஒப்பரேஷன் பார்கேன்” (Operation Barkhane) படை நடவடிக்கையை அது முடிவுக்குக் கொண்டு வருகிறது.
“ஒப்பரேஷன் பார்கேன்” நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுமார் ஐயாயிரம் படையினரைத் திருப்பி அழைத்துவிட்டு அதற்கு மாறாக மாலியின் டாகுபாவை (Takuba) தளமாகக் கொண்டு செயற்படுகின்ற பிரான்ஸ் தலைமையிலான சர்வதேச சிறப்பு நடவடிக்கைப் படைப்பிரிவைப் (Takuba Task Force)பலப்படுத்தி அதன் மூலம் ஜிஹாத் எதிர்ப்புப் போரைத் தீவிரமான புதிய வடிவத்தில் முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
ஜீ-7 நாடுகளது அரசுத் தலைவர்களின் மாநாட்டுக்கு முன்பாக அதிபர் மக்ரோன்நேற்று நடத்திய முக்கிய செய்தியாளர் மாநாட்டில், மேற்கு ஆபிரிக்காவில் பிரான்ஸின் பயங்கரவாத ஒழிப்பு படைநடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதை அறிவித்தார்.
அதற்கு மாறாக அந்த நடவடிக்கை சர்வதேச நாடுகள்இணைந்த ஒரு பரந்துபட்ட பணியாக-புதிய ஜிஹாத் எதிர்ப்புக் கூட்டணியாக மீள்வடிவம் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.சஹாரா-சாஹல் பிராந்தியத்தில் அல்கெய்டா, ஐ. எஸ். எஸ் போன்ற இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய பல ஆயுதக் குழுக்கள் வலுவாகச் செயற்பட்டு வருகின்றன. சிரியாவிலும் ஈராக்கிலும்தோற்கடிக்கப்பட்டுள்ள ஐ. எஸ். இயக்கம் மேற்கு ஆபிரிக்காவில் தன்னை ஒன்று திரட்டிப் பலம் பெற்றுவருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பிரான்ஸின் சாஹல் கூட்டணியின் பிரதான நாடுகளில் ஒன்றான மாலியில் கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில்இரண்டு ஆட்சிக் கவிழ்ப்புகள் இடம்பெற்றுள்ளன. அங்கு ஸ்திரமற்ற அரசியல் நிலை உருவாகி உள்ளது. மாலியின் ஆட்சி தொடர்ந்தும் தீவிரவாதப் பாதையில் பயணிக்குமாயின் அங்கிருக்கின்றதனது படையினரைத் திருப்பி அழைக்கப்போவதாக ஏற்கனவே மக்ரோன் எச்சரித்திருந்தார்.பிரான்ஸின் மற்றொரு நெருங்கிய கூட்டாளியான சாட் நாட்டின் அதிபர் அண்மையில் படை நடவடிக்கை ஒன்றில் உயிரிழந்தார். மாலி மற்றும் சாட் நாடுகளில் உருவாகியுள்ள இத்தகைய அரசியல் மாற்றங்கள் பாரிஸின் மேற்கு ஆபிரிக்க உறவுகளில் குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளன.
2013முதல் சுமார் எட்டுஆண்டுகள் நீடித்த பிரான்ஸின் “ஒப்பரேஷன் பார்கேன்” நடவடிக்கை இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு எதிரான அதன் இராணுவ உத்திகளில் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று பாதுகாப்பு விமர்சகர்கள் கூறுகின்றனர். இலக்கு எதனையும் எட்டாமல் நிதி மற்றும் வளங்களை நீண்ட காலம் விரயமாக்குகின்ற ஒரு நடவடிக்கையாகவே அது கணிக்கப்படுகிறது.”ஒப்பரேஷன் பார்கேன்” நடவடிக்கையில் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட துருப்பினர் பலியாகியுள்ளனர். தீவிரவாதிகள் சமீப காலமாகப் பாலைவனப் பகுதிகளில் பிரெஞ்சு படைகளுக்கு எதிராகக் கண்ணி மற்றும் பொறிவெடித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். மாலியில் கடந்த மார்ச் மாதம் பிரான்ஸின் படைகள் நடத்திய ஹெலிக்கொப்ரர் தாக்குதலில் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 19 சிவிலியன்கள் உயிரிழந்தனர் என்று ஜ. நா. அறிக்கை ஒன்று குற்றஞ்சாட்டி இருந்தது.
இந்த நிலையிலேயே படை நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருகின்றபிரான்ஸின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேற்கு ஆபிரிக்காவில் இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் தனக்குள்ள சுமையை நேட்டோ நாடுகளுடன் மேலும் பகிர்ந்துகொள்ள பிரான்ஸ் விரும்புகின்றது. அதற்கான பேச்சுக்கள் ஜீ-7 மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளன.
பாரிஸிலிருந்து குமாரதாஸன்.