மீண்டும் ஜனாதிபதியாக விரும்பும் ஒர்ட்டேகா தனக்கு எதிரான வேட்பாளர்களைக் கைதுசெய்கிறார்.
மத்திய அமெரிக்காவின் அரசியல் சுகவீனமடைந்த மேலுமொரு நாடு என்று நிகாராகுவாவைக் குறிப்பிடலாம். அங்கே மூன்று தடவைகளாக ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி டானியேல் ஒர்ட்டேகா வரவிருக்கும் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றவேண்டுமென்ற குறியிலிருக்கிறார். தனது நோக்கத்துக்காகத் தன்னை எதிர்ப்பவர்களையெல்லாம் வெவ்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்திக் கைதுசெய்து வருகிறார்.
அடுத்த தேர்தலுக்கு மேலும் ஐந்து மாதங்களிருக்கின்றன. ஓரிரு மாதங்களுக்கு முன்னரேயே அவர் பத்திரிகையாளர்களின் மீது தனது பார்வையைத் திருப்பியிருந்தார். தனது ஆட்சியை விமர்சிப்பவர்களை, எதிர்க்கட்சிகளை ஆதரிப்பவர்கள் பலர் மீது பொருளாதார மோசடி, கருப்புப் பணம் போன்ற குற்றங்களைச் சாட்டி அவர்கள் மீது வழக்குகளைப் போட்டு இழுத்தடிக்க ஆரம்பித்திருந்தார்.
அடுத்த கட்டமாக தனக்கு எதிராக நிற்கும் வேட்பாளர்களை மடக்குவதில் அவர் இறங்கியிருப்பதாகப் பல நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன. சமீபத்தில் ஒவ்வொருவராக அவரது முக்கிய எதிர் வேட்பாளர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் அவருக்கு ஆதரவான பாராளுமன்றத்தின் மூலம் எதிர்த் தரப்பினரை, ஊடகவியலாளர்களை அடக்கக்கூடிய பல சட்டங்களை நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கிறார்.
தனது வாழ்வின் பெரும் பாகத்தை சந்தனீஸ்ட் விடுதலை இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கழித்த அவர் 1985 – 1990 வரை ஜனாதிபதியாக இருந்தார். பின்னர் 2007 இல் ஆட்சியைக் கைப்பற்றி மீண்டும் மீண்டும் பதவியிலிருக்கும் அவர் நாலாவது தடவையும் தொடர்ந்து தானே பதவிக்கு வரவேண்டுமென்று திடமாக இருக்கிறார்.
வரவிருக்கும் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தி வெற்றிபெறக்கூடிய தலைவர் என்று கருதப்பட்ட கிரிஸ்தியானா சமர்ரோ என்ற பத்திரிகையாளர், அரசியல்வாதியைச் சமீபத்தில் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறது நிகாராகுவா அரசு. கிரிஸ்தியானாவின் தாயார் வயோலெட்டா 1990 ம் ஆண்டுத் தேர்தலில் ஒர்ட்டேகாவை வீழ்த்தி நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதியானவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சுதந்திரமான ஊடகம் என்ற அமைப்புக்குத் தலைவராக இருந்த கிரிஸ்தியானா வெளிநாடுகளின் கையாளென்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.
எதிர்க்கட்சி வேட்பாளர்களை வேட்டையாடுவதை நிறுத்தும்படி கோரி ஸ்பெய்னும், அமெரிக்காவும் நிகாராகுவா அரசை விமர்சித்து வருகின்றன. டானியல் ஒர்ட்டேகாவின் மகள், உப ஜனாதிபதி மனைவி ரொஸாரியோ முரில்லோ உட்பட அவருக்கு நெருங்கியவர்கள் சிலர் மீது அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அமெரிக்கா தனது உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிடக்கூடாதென்று திருப்பிச் சாடுகிறார் டானியல் ஒர்ட்டேகா.
சாள்ஸ் ஜெ. போமன்