வளைகுடா நாடுகளின் வெப்ப நிலை ஐம்பது செஸ்சியஸைத் தாண்ட நீச்சல் குளங்களில் உறைபனிப் பாளங்கள் போடவேண்டியதாகிறது.
எமிரேட்ஸ், ஈரான், ஓமான், குவெய்த் ஆகிய நாடுகள் இவ்வருடக் கோடைகாலத்தில் மீண்டும் கடும் வெப்பநிலையால் தாக்கப்பட்டிருக்கின்றன. கடந்த வார இறுதியில் வெப்பமானிகள் 50 C ஐ தாண்டின. இந்தச் சமயத்தில் அந்த நாடுகளில் கோடை வெப்பநிலை அதிகமாக இருப்பது வழக்கமானாலும் இம்முறை இதுவரை என்றுமில்லாத கடும் வெப்பமாக இருக்கிறது.
மத்தியூ கப்பூச்சி என்ற வானிலை ஆராய்வாளர் அந்த வெப்பநிலையை விளங்கப்படுத்த 49 C வெம்மையில் நிற கட்டிகள் [கிரயோன்ஸ்] கரைகின்றன, வீதியில் போடப்பட்டிருக்கும் தார் உருகுகிறது, ரயில் பாதையின் இரும்பு இளகி அதை இறுக்கியிருக்கும் இரும்பு ஆணிகளைத் தளரவைக்கின்றன என்ற உதாரணங்களைப் பத்திரிகையொன்றில் பாவித்திருந்தார்.
ஸ்வெய்ஹான் என்ற அபுதாபிக்கு வெளியேயிருக்கும் கிராமமொன்றிலும், ஒபிடே என்ற ஈரானிய நகரொன்றிலும் கடந்த சனியன்று [05 ஜூலை] வெப்ப நிலை 51C ஆகியது. குவெய்த்தின் ஜஹ்ராவில் 50.88C ஆகவுமிருந்தது. சுனைனா, ஓமானில் 50.11C ஆகியிருந்தது. அபுதாபிக்கு வெளியே ஸ்வெய்ஹானில் அதற்கடுத்த நாளே வெம்மை 51.77 C ஐ எட்டியது.
சமீப வருடங்களில் வெளிவந்த காலநிலை ஆராய்ச்சி அறிக்கைகளில் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துவரும் வெப்பநிலைவின் விளைவுகள் பற்றிப் பற்பல எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றன. இதே வேகத்தில் அங்கு வெம்மை அதிகரிக்குமானால் அப்பகுதி மனித வாழ்வுக்கு ஒவ்வாத இடமாகலாம் என்று எச்சரிக்கப்படுகிறது. விரைவில் மத்திய கிழக்கைச் சுற்றியிருக்கும் 43 நாடுகளில் ஏற்படும் இறப்புக்களில் 37 % அதீத வெம்மையினால் ஏற்பட்டதால் தான் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்