இவ்வருட முதல் ஐந்து மாதங்களில் இந்திய – சீன வர்த்தகத்தின் வளர்ச்சி 70 % ஆல் அதிகரித்திருக்கிறது.
சீனாவின் வர்த்தக அமைச்சு சமீபத்தில் வெளியிட்டிருக்கும் விபரங்களின்படி இவ்வருட முதல் ஐந்து மாதங்களில் இந்தியாவுடனான வர்த்தகம் 70.1 விகிதத்தால் அதிகரித்து 48.16 பில்லியன் ஆகியிருக்கிறது. ஏற்கனவே 2020 இல் சீனா அமெரிக்காவின் முக்கிய வர்த்தக நாடாக இருந்த இந்தியாவிடமிருந்து அந்த இடத்தைக் கைப்பற்றிவிட்டது.
இந்தியாவுக்கான சீன ஏற்றுமதிகள் 64.1 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. இந்தியாவிடமிருந்து இறக்குமதி 90.2 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மதிப்பிலிருக்கும் வித்தியாசம் தொடர்கிறது. 2020 – 2021 இல் இரண்டு நாடுகளுக்குமிடையேயான வர்த்தக இடைவெளி சீனாவின் பங்கு 44 பில்லியன் டொலர் அதிகமாக இருந்தது. ஆனால் 2017 – 2018 வருட வர்த்தகத்தில் சீனாவின் கை 63 பில்லியன் டொலர்கள் பெறுமதியால் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
“இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினைகளால் உண்டாயிருந்த அரசியல் மனக்கசப்புக்கள் வேகமாக மாறி மீண்டும் இரண்டு நாடுகளுகளுக்குமிடையேயான நல்லுறவு வளர்ந்து வருகிறதென்பதையே இது காட்டுகிறது,” என்று இதுபற்றி சீனா குறிப்பிடுகிறது.
குறிப்பிட்ட காலத்திலேற்பட்டிருக்கும் சீனாவின் வர்த்தக அதிகரிப்புக்குக் காரணம் கொரோனாத் தொற்றுக்காலத்தில் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்களாகும் என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்