விமானங்களுக்கான மான்ய குடுமிப்பிடிச் சண்டையால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்கொட்ச் விஸ்கிக்கு மீண்டும் நல்ல காலம் பிறக்கிறது.

அத்திலாந்திக்குக்கு அந்தப் பக்கத்தில் போயிங்குக்கும், இந்தப் பக்கத்தில் ஏர்பஸ்ஸுக்கும் கொடுக்கப்பட்டு வந்த பிரத்தியேக சலுகைகளை இரு சாராரும் ஒத்துக்கொள்ளாததால் வெவ்வேறு தயாரிப்புக்கள் மீது தண்டனை வரி விதித்திருந்தார்கள். அப்படியாக அமெரிக்காவின் தண்டனை வரியால் பாதிக்கப்பட்டிருந்தது ஸ்கொட்ச் விஸ்கியும். 2019 இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதியாக இருந்த ஐக்கிய ராச்சியத்தின் ஸ்கொட்ச் விஸ்கியின் மீது 25 % தண்டனை வரி போட்டவர் டொனால்ட் டிரம்ப்.

சில நாட்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஜோ பைடனுடன் நடத்திய வர்த்தகப் பேச்சுவார்த்தைகளால் அந்தத் தண்டனை வரிகள் நீக்கப்பட, ஸ்கொட்ச் விஸ்கித் தயாரிப்பாளர்கள் சந்தோசத்தில் மிதக்கிறார்கள். தண்டனை வரிகள் நீக்கப்படும்போது விலை குறைய ஏற்றுமதி அதிகரிக்கும்.

அமெரிக்கா தனது நாட்டு நிறுவனமான போய்ங்குக்கும், ஐரோப்பா தனது தயாரிப்பான ஏர்பஸ்ஸுக்கும் பெருமளவு மான்யங்களைக் கொடுத்துவந்தன. சர்வதேச வர்த்தக அமைப்பின் அடிப்படை ஒழுங்குகளுக்கு எதிரான அவைகளை இரண்டு பக்கத்தினரும் மற்றவரை நோக்கி நீக்கச் சொல்லி 2004 லிலிருந்தே முட்டி மோதிக்கொண்டார்கள். இரண்டு பக்கத்தாருமே மற்றவரைச் சுட்டிக்காட்டித் தமது மான்யங்களை நிறுத்த மறுத்துப் பதிலாக மற்றவர்களின் வெவ்வேறு தயாரிப்புக்களுக்கும் தண்டனை வரிகள் போட்டு வந்தார்கள். அவைகளின் உச்சக்கட்டமாக டொனால்ட் டிரம்ப் அவைகளை மேலும் உயர்த்த, ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்கப் பொருட்கள் பலவற்றிற்குத் தமது தண்டனை வரியைப் போட்டன.

பதினேழு வருடங்களாக இழுபறிப்பட்ட விமானங்களுக்கான மான்யம் பற்றிய பிரச்சினைக்கு ஐரோப்பிய – அமெரிக்க ஒப்பந்தத்தின்படியான தீர்வு அடுத்த ஐந்து வருடங்களுக்கு இரண்டு பகுதியாரும் எதிர்ப் பகுதியினரின் தயாரிப்புக்கள் மீது போட்டிருக்கும் தண்டனை வரிகளை முழுசாக அகற்றிவிடுவதாகும். அந்தப் பிரச்சினைக்காக 2019 இல் போடப்பட்ட தண்டனை வரிகள் ஸ்கொட்ச் விஸ்கி மீது மட்டுமன்றி, பாலேடு, ஒலிவ் எண்ணெய் ஆகியவையையும் பாதித்திருந்தன. அதன் பின் தாம் அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் 600 மில்லியன் பவுண்டுகளை இழந்ததாகக் குறிப்பிடும் ஸ்கொட்ச் விஸ்கித் தயாரிப்பாளர்கள் எடுக்கப்பட்டிருக்கும் முடிவைக் கைதட்டி வரவேற்கிறார்கள்.

அதேயளவு மகிழ்ச்சிக் குரலை அமெரிக்காவின் விஸ்கி தயாரிப்பாளர்களிடமிருந்து கேட்க முடியவில்லை. காரணம் இரும்பு, மற்றும் அலுமினியத் தயாரிப்புகள் சம்பந்தப்பட்ட மேலுமொரு பிரச்சினையும் டொனால்ட் டிரம்ப்பால் எழுப்பப்பட்டது. அதற்காக அவர் ஐரோப்பாவின் வேறு சில பொருட்கள் மீது தண்டனை வரிகளைப் போட, ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவின் வேறு சில பொருட்கள் மீது தண்டனை வரிகளை விதித்தது. அவைகளிலொன்று அமெரிக்காவின் விஸ்கி மீதானதாகும். அந்தப் பிரச்சினை பற்றிய பேச்சுவார்த்தைகளோ தீர்வுகளோ இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே அதற்கான கதவுகள் திறக்கும்வரை காத்திருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *