சில வாரங்களுக்கு முன்னர் துறைமுகத்தில் எரிந்த கப்பலினால் எண்ணெய்க் கசிவு உண்டாகியதா என்று சிறீலங்கா தொடர்ந்தும் கவனிக்கிறது.
மிக ஆபத்தான இரசாயணத் திரவங்களை ஏற்றிவந்த தனது கொள்கலன்களில் ஏற்பட்டிருந்த கசிவுகளை அறிவிக்காமல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த சிங்கப்பூர் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தினால் அது தான் ஏற்றிவந்த பொருட்களுடன் முழுவதும் எரிந்து நாசமாகியது. சிறீலங்காவின் கடற்பிரதேச விபத்தில் அது போன்ற எந்த மோசமான விபத்தும் இதுவரை நடந்ததில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
கொழும்பை அடுத்துள்ள பிராந்தியத்தின் கடற்கரையெங்கும் எரிந்துபோன ஆபத்தான குப்பைகளும், கப்பலின் பாகங்களும் ஒதுங்கின. அத்தீவிபத்தினால் ஏற்பட்ட சூழல் அழிவுகள் தொடர்ந்து கடற்கரையை ஒட்டிய பிராந்தியங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. கொத்துக்கொத்தாக இறந்துபோன மீன்கள் உட்பட்ட கடல்வாழ் பிராணிகள் கடற்கரையில் ஒதுங்குகின்றன. பிளாஸ்டிக் துண்டுகளும் பரவலாக ஒதுங்கியவண்ணமிருக்கின்றன.
கப்பலும் அதிலிருந்து கொள்கலங்கள் அவைகளினுள்ளிருந்த எரிபொருட்களெல்லாமே எரிந்து முடிந்துவிட்டதால் அல்லது எண்ணெய் தாங்கிவந்த கொள்கலங்கள் சில எரியாமல் கடலுக்குள் மூழ்கி அவைகளிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு மேலும் சூழலுக்கும், அங்கே வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்து இருக்கிறதா என்பது பற்றி இன்னும் முழுவதுமாகத் தெரியவில்லை.
கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு அதிகாரி தர்ஷணி லகந்தபுர பத்திரிகையாளர்களுடன் பேசியபோது, “கப்பல் எரிந்துகொண்டிருந்த போது தினமும் நாம் அதையடுத்த பிராந்தியத்தில் ஆராய்வுகளைச் செய்துகொண்டிருந்தோம். இதுவரை எண்ணெய்க் கசிவு எதுவும் ஏற்பட்டிருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை,” என்கிறார். எரியும் கப்பலுடனேயே அதிலிருந்தவைகளும் எரிந்தழிந்துவிட்டன என்பதே அவரது கணிப்பாக இருக்கிறது.
எரிந்த கப்பலான X-Press Pearl இன் தலைமை மாலுமி வைத்தாலி சுயூத்காலோ சிறீலங்காவின் கடற்பரப்புச் சட்டங்களை மீறியதற்காகக் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவர் பல முக்கிய ஆவணங்களையும் வேண்டுமென்றே அழித்துவிட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
வெவ்வேறு துறைகளைச் சார்ந்த 23 பேரைக்கொண்ட ஒரு குழு சிறீலங்காவின் சுற்றுப்புற சூழல் அமைச்சால் அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் குறிப்பிட்ட கப்பலின் தீவிபத்து, எரிவு ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கும் சேதங்களின் பல கோணங்களையும் ஆராய்ந்து அதுபற்றி அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இழப்புக்களுக்கான சேதத்தையும் அண்ணளவாகக் கணித்துச் சமர்ப்பிப்பார்கள். அச்சேதத்துக்கான நஷ்ட ஈடு கோருவதற்குச் சிறீலங்கா அரசு தயாராகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்