டோக்கியோ ஒலிம்பிக் பந்தயங்கள் அந்த நாட்டின் ஆணுறைத் தயாரிப்பாளர்களுக்கும் ஏமாற்றமளிக்கின்றன.
ஒலிம்பிக் போட்டிச் சமயத்தில் கைக்கொள்ள வேண்டிய கடுமையான கட்டுப்பாடுகள், வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு அனுமதியில்லாமை, தமது இஷ்டப்படி விளையாட்டு வீரர்களுக்கு ஆணுறைகளைப் பெருமளவில் இலவசமாகக் கொடுக்க முடியாதிருத்தல் ஆகியவை, பெரும் வியாபாரத்தை எதிர்பார்த்திருந்த ஜப்பானின் ஆணுறைத் தயாரிப்பாளர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது. சமீபகாலக் கண்டுபிடிப்பான 0.01 மி.மீ மட்டுமே தடிமானமுள்ள ஆணுறைகளைப் பெருமளவில் சர்வதேசத்துக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்திலிருந்தார்கள் அவர்கள்.
சுமார் கால் நூற்றாண்டாகவே உயர்மட்டப் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களுக்கு இலவசமாக ஆணுறைகளை கொடுத்துப் பாதுகாப்பான உடலுறவில் மட்டும் ஈடுபடுமாறு உற்சாகப்படுத்துவது வழக்கமாக இருக்கிறது. அதன் மூலம் பாலியல் நோய்களைப் பரவாமல் தடுப்பது விளையாட்டுப் பந்தயங்களை நடத்துபவர்களின் எண்ணம். டோக்கியோவுக்கு வரும் வீரர்களுக்கு “மிகக் கவனமாக, அதி அத்தியாவசியமான மனிதத் தொடர்புகளை மட்டுமே வைத்துக்கொள்ளவேண்டும்,” என்று கையேடுகளில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஆயினும் சுமார் 160,000 ஆணுறைகளை [மட்டும்] அவர்களிடையே பகிர அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச ஒலிம்பிக் அமைப்பின் முக்கிய திட்டங்களில் ஒன்று எய்ட்ஸ் போன்ற கடுமையான பாலியல் நோய்களைக் கட்டுப்படுத்துவதாகும் என்பதாலேயே அவை விநியோகிப்பப்படுகின்றன.
“இந்தச் சமயத்தில் நாம் பாவனைக்கு உட்படுத்த முடியாதவற்றை ஏன் எங்களுக்குத் தரவேண்டும்?” என்று அலுத்துக்கொள்ளும் வீரர்களும் இல்லாமலில்லை. போட்டி அமைப்பாளர்கள் பதிலாக, “இவற்றை நீங்கள் உங்களது நாடுகளுக்கு எடுத்துச்சென்று அங்கே பாவிக்கலாம்,” என்று பதிலளிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்