மெக்ஸிகோ மென்பந்துக் குழுவினரின் ஒலிம்பிக்ஸ் சீருடைகள் குப்பைகளில் அடுத்த நாளே கிடந்தன.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தான் மெக்ஸிகோ நாட்டின் பெண்களின் குழு முதல் தடவையாக ஒரு ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்குபற்றும் தகுதிக்கு வந்திருந்தது. மட்டுமல்லாமல் அக்குழுவினர் கடைசிக் கட்டம் வரை சென்று நாலாவது இடத்தைப் பிடித்தனர். நாட்டுக்கு அந்தப் பெருமையைப் பெற்றுக்கொடுத்த அணியினர் சிலரின் சீருடைகள் அடுத்த நாளே ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் பங்குபற்றுகிறவர்கள் வாழும் பகுதியின் குப்பையில் கிடந்ததைக் கண்டு அதைச் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார் மெக்ஸிகோ நாட்டின் குத்துச்சண்டை வீரரொருவர்.

தனது டுவீட்டில் படத்தைப் பகிர்ந்த அந்த குத்துச்சண்டை வீராங்கனை பிரையண்டா தமாரா குரூஸ் “ஒலிம்பிக்ஸில் பங்குபற்றிய நாமெல்லாம் பெருமையுடன் அணிந்துகொள்ளத் துடிக்கும் இந்தச் சீருடைகளை மென்பந்துக் குழுவினர் ஒலிம்பிக்ஸ் நகரக் குப்பையில் எறிந்திருப்பது கவலைக்குரியது. இந்தச் சீருடைகள் ஒரு வருட முயற்சிகள், தியாகங்கள், கண்ணீர்த்துளிகளைப் பிரதிபலிக்கின்றன,” என்று எழுதியிருந்தார்.

தமாரா குருஸின் டுவீட்டையடுத்து மென்பந்துக் குழுவினர் மீதான விமர்சனக்கணைகள் பலரிடமிருந்தும் எழுந்தன. அவைகளில் ஒரு பகுதி வெறுப்பையும், கோபமான எச்சரிக்கைகளையும் கூடக் கொண்டிருந்தன. மெக்ஸிகோவின் ஒலிம்பிக்ஸ் அமைப்பின் தலைவர், “தமது சீருடைகளை குப்பையில் போட்டுவிட்டுத் தங்கியிருந்த ஒலிம்பிக்ஸ் முகாம் கட்டில் விரிப்புக்களைத் தம்முடன் எடுத்துச் சென்றிருப்பது வருத்தத்துக்குரியது,” என்று சாடினார். 

மென்பந்துக் குழு வீராங்கனையொருந்தி நடந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அதை அணிந்து கொள்வது பெருமைக்குரியது, தாம் எவருமே சீருடைகளைக் குப்பையில் எறியவில்லையென்று குறிப்பிட்டார். மென்பந்துக் குழுவினரின் முகாமையாளரோ “விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட சீருடைகள் கொடுக்கப்பட்டன. எல்லாவற்றையும் திருப்பித் தமது நாடுகளுக்குக் கொண்டு செல்வதானால் எடைக்கு ஏற்ற கட்டணம் கட்டவேண்டும். இது பெரிய விடயமல்ல,” என்றார்.

உண்மையான காரணத்தை ஆராய்ந்ததில் பெட்டிகளுக்குள் இடமில்லாமை, மேலதிக எடைக்கான கட்டணப் பிரச்சினை எதுவும் காரணமாக இருக்கவில்லை. விளையாட்டுக் குழுவைச் சேர்ந்த சிலர் ஒலிம்பிக்ஸ் ஹோட்டல் கட்டில் விரிப்புக்களைத் தமது பெட்டிகளுக்குள் வைத்துக்கொண்டதால் சீருடைகளுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே குழுவைச் சேர்ந்த சிலர் மீது விசாரணைகள் நடாத்தப்படவிருக்கின்றன. அவர்களுக்குத் தண்டங்கள், தண்டனைகள் கொடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மெக்ஸிகோ மென்பந்து விளையாட்டுக் குழுவில் 15 பெண்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரேயொருவர் மட்டுமே மெக்ஸிகோவில் பிறந்தவராகும். மற்றவரெல்லாரும் அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, அங்கேயிருக்கும் விளையாட்டுக் குழுக்களில் விளையாடுகிறவர்களாகும். 

அவர்களெல்லோரும் மெக்ஸிகோ – அமெரிக்க இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள். தமது மூதாதையர் மூலம் மெக்ஸிகோவின் குடிமக்களான அவர்களுக்கு நாட்டில் பேசப்படும் மொழியான ஸ்பானிஷ் சரியாகத் தெரியாது. அவர்களின் குழுவில் ஆங்கிலம் தான் தொடர்பு மொழியாகப் பாவிக்கப்படுகிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *