கடுமையாக கொரோனாப் பரவும் புள்ளியாகியிருக்கும் கொபா அமெரிக்கா கோப்பைப் போட்டியில் பிரேசில் முன்னோக்கி நகர்கிறது.
பிரேசிலில் நடந்துகொண்டிருக்கும் தென்னமெரிக்க உதைபந்தாட்டக் கோப்பைக்கான போட்டிகளில் பங்குபற்றுகிறவர்களுக்கிடையே கொவிட் 19 அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. பந்தயத்துடன் சம்பந்தப்பட்டவர்களிடையே கொரோனாத் தொற்று 13 ஆக இருந்து அடுத்த நாளே 66 ஆக அதிகரித்திருப்பதாக நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சு அறிவிக்கிறது.
சுமார் 6,500 பேர்களைப் பரிசோதித்ததில் போட்டிகளில் பங்குபற்றும் பத்து நாட்டுக் குழுக்களின் 27 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் ஐந்து வெவ்வேறு நாடுகளின் உதைபந்தாட்ட வீரர்களாகும். ஓரிரு நாடுகள் தொற்றுக்குள்ளாகியிருப்பவர்களின் பெயர்கள், விபரங்களை வெளியிட மற்றும் சில அவற்றைத் தவிர்த்து வருகின்றன. தவிர பந்தய ஏற்பாடுகள் செய்பவர்களில் 39 பேரும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
வியாழனன்று தனது இரண்டாவது போட்டியில் பெருவைச் சந்தித்தது பிரேசில். வழக்கமாக விளையாடுபவர்களில் பாதிப்பேரை குழுவின் நிர்வாகத் தலைவர் லியர்னாடோ பச்சி மாற்றியிருந்தார். ஆயினும், 4 – 0 என்ற வித்தியாசத்தில் பிரேசில் வெற்றிபெற்றது. நெய்மார், அலெக்ஸ் சாந்திரோ, ரிபேய்ரியோ, ரிச்சார்சன் ஆகியோரே வெற்றியைக் கொடுத்தவர்களாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்