தேர்தல் முறையில் குறைசொல்லி நாட்டின் ஜனநாயக அமைப்பைக் கேள்விக்குள்ளாக்குவதாக பொல்சனாரோ மீது விசாரணை.

முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போலவே பிரேசில் நாட்டின் தேர்தல் முறை, வாக்களிப்பு முறை ஆகியவைகளில் குற்றங்குறைகள் சொல்லி வருகிறார் பிரேசில் ஜனாதிபதி பொல்சனாரோ. கடந்த தேர்தலின் இரண்டாம் சுற்றில் தான் அதே தேர்தல் முறையில் அதே எலக்ரோனிக் வாக்கெடுப்பு வழியில் வென்றாலும் கூட பிரேசில் மீண்டும் காகிதத்தில் வாக்களிக்கும் முறைக்குப் போகவேண்டுமென்று பிரேரணையை முன்வைத்திருக்கிறார். 

பிரேசிலில் கொரோனாத்தொற்றுக்களால் ஏற்பட்டிருக்கும் பெரும் இறப்பு எண்ணிக்கைகள், மருத்துவ சேவை ஒழுங்கின்மை உட்பட்ட பல காரணங்களால் மக்களிடையே ஆதரவை இழந்துவருகிறார் பொல்சனாரோ. அடுத்த வருடம் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட்டால் அவர் தோற்றுவிடுவாரென்று பல கணிப்பீடுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவரது கொரோனாக்கால நடவடிக்கைகள் நாட்டுக்கு மோசமான விளைவைத் தருகின்றன என்று மக்கள் பலர் எதிர்ப்புப் பேரணிகளை நடாத்தி வருகிறார்கள்.

தான் அடுத்த தேர்தலில் தோற்றுப்போகும் பட்சத்தில் தேர்தல் முறையில் தவறு, வாக்கெடுப்பு எண்ணியவைகளில் ஒழுங்கீனம், இயந்திரங்களின் செயற்பாடுகளில் தவறு ஆகிய காரணங்களைக் காட்டித் தொடர்ந்தும் பதவியில் நீடிக்கலாம் என்ற எண்ணத்திலேயே அவர் அப்படியான குற்றச்சாட்டுக்களை நாட்டின் தேர்தல் முறைமீது அள்ளி வீசி வருவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகிறார்கள். 

தேர்தல் முறைபற்றி பொல்சனாரோவின் குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்து விசாரித்த நாட்டின் 18 தற்சமய மற்றும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 1996 முதல் நடந்துவரும் தற்போதைய தேர்தல் முறையிலும், இயந்திரங்களால் எண்ணப்படும் முறையிலும் எவ்வித தவறுகளும் இல்லை என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள். நீதிபதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், உட்பட்ட பல முக்கியத்துவர்கள் தேர்தல் நடப்பது, வாக்குகள் எண்ணப்படுவது போன்றவற்றை ஒவ்வொரு கட்டத்திலும் கண்காணித்து வருகிறார்கள் என்று அந்த நீதிபதிகள் குழு சுட்டிக் காட்டுகிறது. பொல்சனாரோவின் எண்ணப்படி மீண்டும் காகித முறைத் தேர்தலுக்குத் திரும்புவதால் தான் வாக்குகளை எண்ணுவதிலும், வாக்குப்பெட்டிகளைக் கடத்துவதுமாகப் பல தில்லுமுல்லுகள் இருக்கும் என்று அவர்களது அறிக்கை குறிப்பிடுகிறது.

அதனால் பிரேசிலின் உச்ச தேர்தல் நீதிமன்றம் நாட்டின் தேர்தல், ஜனநாயகம் ஆகியவற்றைக் கேள்விக்குறியாக்கிவரும் பொல்சனாரோ மீது விசாரணையொன்றை நடாத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. அவர்களுக்குப் பதிலாக, “என்னை மிரட்டமுடியாது. நான் எனது ஜனநாயக உரிமைகளின் ஒன்றான கருத்துரிமையைப் பாவிக்கத்தான் போகிறேன்,” என்கிறார் ஜனாதிபதி பொல்சனாரோ.

நாட்டின் பாராளுமன்றத்தின் குழுவொன்று பொல்சனாரோவின் “மீண்டும் காகித வாக்குகள், மனிதர்களால் எண்ணப்படுதல்,” பிரேரணையை வியாழனன்று விவாதித்து அதுபற்றி முடிவெடுக்க இருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *