ஐரோப்பியக் கால் பந்து போட்டி:அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து!
ஐரோப்பாவில் உதைபந்தாட்ட ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் கட்டுப்படுத்த முடியாதவாறு ஒன்று திரள்வது “டெல்ரா” எனப்படுகின்ற புதிய வைரஸ் திரிபின் பெருந்தொற்றுக் களங்களை உருவாக்கி விடலாம்.
ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்கல் இவ்வாறு சந்தேகத்தையும் அச்சத்தையும் வெளியிட்டிருக்கிறார்.
ஜேர்மனி – பிரான்ஸ் அணிகள் இடையேகடந்த செவ்வாயன்று நடந்த ஆட்டத்தைக்காண்பதற்காக சுமார் 14 ஆயிரம் ரசிகர்கள் மியூனிச் அரங்கத்தில் திரண்டனர். அதனை நினைவுபடுத்தியுள்ள மெர்கல், தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஆட்டங்களது அரங்குகள் வைரஸ் தொற்றும் பெரும் மையங்களாக மாற்றிவிடலாம் என்ற அச்சம் எழுவதாகக் கூறியிருக்கிறார்.
“கொரோனா வைரஸ் அகன்றது என்ற எண்ணத்துடன் நடந்துகொள்ளமுடியாது” என்று கூறியுள்ள அவர், லிஸ்பேர்ன் நகரில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்திருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பேர்னில் மீண்டும் வைரஸ் தொற்றுக்கள் எழுந்ததை அடுத்து வார இறுதி நாட்களில் ஆட்கள் அந்த நகருக்குச் செல்வதும் அங்கிருந்து வெளியேறுவதும் தடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸில் இருந்து உருமாறிய டெல்ரா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகின்றது. இந்தநிலையில் ஐரோப்பியக் கிண்ணத்தின் அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் அங்கு வெம்பிளி (Wembley) அரங்கில் நடைபெறஏற்பாடாகி உள்ளன. இறுதி ஆட்டங்கள் டெல்ரா தொற்றுக்களை தீவிரமாக்கிவிடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த நிலையி்ல் உதைபந்தாட்ட அணிகளினதும், ரசிகர்களினதும் பாதுகாப்புக் கருதி இறுதி ஆட்டங்களை இங்கிலாந்துக்கு வெளியே வேறு ஒரு நாட்டுக்கு இடம் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுவருவ தாகத் தகவல் வெளியாகி உள்ளது.பொதுச் சுகாதாரம் இன்னமும் முன்னுரிமையான விடயமாக உள்ளது.
நாட்டின்சுகாதாரப் பாதுகாப்புக் கருதி எந்த முடிவுகளும் எடுக்கப்படலாம் என்று பிரதமர்பொறிஸ் ஜோன்சன் தெரிவித்திருக்கிறார். அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் ஹங்கேரியில் புடாபெஸ்ற் நகருக்கு இடம்மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.