அருந்தகங்கள் முன் சிறிய அளவில்”மினி இன்னிசை” நிகழ்வுகள் அனுமதி இறுக்கமான கட்டுப்பாடு இருக்காது.
திங்களன்று இசைக் கச்சேரிகளைசிறிய அளவில் நடத்துவதற்கு அரசுஅனுமதி வழங்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
பெரிய அளவிலான உள்ளரங்க நிகழ்வுகள் தடுக்கப்பட்டாலும் உணவகங்கள், அருந்தகங்களின் உள்ளேயும் வெளியேயும் சிறிய கூட்டங் களுடன் “மினி இசைக்கச்சேரிகளை” நடத்த அனுமதிக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இசைப் பிரியர்களுக்கு விடுத்திருக்கிறார்கலாசார அமைச்சர் Roselyne Bachelot.
பிரான்ஸில் “Fête de la musique” என்று அழைக்கப்படுகின்ற உலக இசைத் திருவிழா எதிர்வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் நேரகாலத்துடன் நீக்கப்பட்டுள்ளன. உணவகங்கள் கிட்டத்தட்ட முழு அளவில் இயங்கத் தொடங்கி உள்ளன. நகரங்களின் தெருக்களில் சனக் கூட்டம் நிரம்பத் தொடங்கியுள்ளது. இதனால் இசைத் திருவிழாவின் இரவுக் கொண்டாட்டங்கள் இம்முறை உற்சாகத்துடன் நடப்பதற்கு வாய்ப்புள்ளது.
இசைத் திருவிழாவுக்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை பிராந்தியசபைகளுக்கான தேர்தல்களின் முதற்கட்ட வாக்களிப்பு நாளாகும். இதற்கிடையில் – வைரஸ் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வேகமான முடிவுகள் தேர்தலை நோக்கமாகக் கொண்டே எடுக்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சிகளின் பிரமுகர்கள் அரசின் மீது விமர்சனங்களைப் பொழி கின்றனர்.
குறிப்பிட்ட நாளுக்கு முன்னரே அவசரமாக ஊரடங்கை நீக்கியமை தேர்தலால் கிடைத்த “பரிசு” என்று எதிரணியினர் கிண்டல் செய்துள்ளனர்.பிராந்திய சபைகளுக்கான இரு கட்டவாக்குப் பதிவு எதிர்வருகின்ற 20, 27 ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. இக்காலப் பகுதிக்குள் அரசு மக்களுக்கு மேலும் “பரிசுகளை” அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம் – என எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் வைரஸ் இன்னமும் முற்றாக வெல்லப்படாவிடினும் அதன் தொற்றுக்கள் வேகமாகக் குறைந்து வருகின்றன. அதற்கமையவே கட்டுப்பாடுகளைத் தளர்த்துகின்ற முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று அரசுத் தலைவர்கள் கூறிவருகின்றனர்.
குமாரதாஸன். பாரிஸ்.