கோவிலில் குருக்கள், எந்தச் சாதியைச் சேர்ந்தவராகவும் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்கலாம்!
“பிராமணரல்லாதவர்கள் மட்டுமல்ல பெண்களும் இந்துக் கோவில்களில் குருக்களாக நியமிக்கப்படலாம்,” அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார். அது பற்றிக் குறிப்பிடுகையில் இந்துசமய அற நிலைத்துறை அமைச்சர் புதியதாகப் பதவியேற்றிருக்கும் திமுக அரசின் 100 நாட்களுக்குள் அது நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.
அந்த அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் வரும் 36,000 இந்துக் கோவில்களிலும் சாதியைக் கவனிக்காமல் ஆன்மீகப் பயிற்சியுடன் அர்ச்சகர்கள் பதவியமர்த்தப்படுவார்கள் என்பதை விடப் பெண்களும் அர்ச்சகர்களாகலாம் என்ற விடயம் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
சமூக மாற்றங்களை விரும்பும் கட்சிகளும் அமைப்புக்களும் அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கின்றன. எதிர்க்கருத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் அரசாங்கம் நாட்டின் ஆன்மீக விடயங்களில் எப்படி நடக்கவேண்டுமென்ற இந்து சமய வழமைகளை மீறும் முடிவுகளில் தலையிடலாகாது என்கிறார்கள்.
சிறு தெய்வ வழிபாட்டுத் தலங்களில் ஏற்கனவே பெண்கள் குருக்களாக இருப்பதாக சிதம்பரத்திலிருந்து ஒரு அர்ச்சகர் தெரிவிக்கிறார். பல கோவில்களில் ஆண் குருக்கள் இல்லாத சமயத்தில் அவரது மனைவி, குடும்பப் பெண்கள் அர்ச்சகர்களாகப் பொறுப்பேற்பதாக அவர் சுட்டிக் காட்டுகிறார்.
தமிழ் நாடு பா.ஜ.க தலைவர் “பண்டைக் காலத்தில் பெண்கள் அர்ச்சகர்களாக இருந்திருக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டு அமைச்சரின் அறிவிப்பை வரவேற்றிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்