தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் வைபவங்களுக்கான உத்தியோகபூர்வமான பாட்டாக்கப்பட்டது.

மனோன்மணியம் சுந்தரனாரால் பாடப்பட்ட “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்…..” என்று ஆரம்பிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் உத்தியோகபூர்வமான வைபவங்கள், கல்விக்கூடங்களில் பாடப்படவேண்டிய பாடல் என்று தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது.

1900 களின் ஆரம்பத்தில் தமிழகத்தில் நடக்கும் வைபவங்களில் குறிப்பிட்ட பாடல் பாடப்பட்டு வந்தது. அவர்கள் அறிஞர் அண்ணா முதலமைச்சராகியதும் அவரிடம் அதைத் தமிழக அரசின் வைபவங்களில் பாடும்படி கேட்டுக்கொண்டார்கள். அப்படியான பல வேண்டுதல்களைக் கேட்டு 1970 களில் தமிழக அரச வைபவங்களில் பாடவேண்டும் என்று கலைஞர் கருணாநிதி  கேட்டுக்கொண்டார்.

2018 இல் காஞ்சி காமாட்சி பீடத்தைச் சேர்ந்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சென்னையில் நடந்த வைபவமொன்றில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும்போது எழுந்து நிற்க மறுத்திருந்தார். மதுரை நீதிமன்றம் தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு வேண்டுதல் என்பதால் அதைப் பாடும்போது எழுந்து நிற்பது அவசியமில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது.

தனியார் நிறுவனகள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதைக் கொண்டுவரவேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மாற்றுத் திறனாளிகள் தவிர அனைவரும் அப்பாடலைப் பாடும்போது எழுந்து நிற்கவேண்டும் என்கிறது தமிழக அரசின் ஆணை.

சாள்ஸ் ஜெ. போமன்