ஓகி புயல் 4வது ஆண்டு நினைவு நாள் 2021 நவம்பர் 29 மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி*

2017 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி ஒக்கீ புயல் தமிழகத்தை தாக்கிய பொழுது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்ட ஒரு மீனவர், குமரி மாவட்டத்தில் 149 மீனவர்கள், என 197 பேர் மாயமானார்கள் என  அரசு சார்பாக பதிவு செய்யப்பட்டது.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேர் மற்றும் நாகப்பட்டினம் தூத்துக்குடி என 22  மீனவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் 15 பேரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டு,  கேரளா மாநிலம் அரசு மருத்துவமனையில் இருந்த சடலங்களை அடையாளம் கண்டுபிடிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் 247 பேர்களிடம் இருந்து டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது.

பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது தமிழகமே பதட்டத்தில் இருந்தது இன்றோடு 4 ஆண்டுகள் 2021 நவம்பர் 29 நிறைவடைந்துள்ளது. இன்று வரையும் எந்த தகவலும் இல்லாத மீனவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள மீனவர்கள் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மிகப்பெரிய வேதனையும் கண்ணீரும் கொண்டிருக்கிறார்கள். இப்பேர்ப்பட்ட நிகழ்வுகள் இனிமேலும் ஏற்படக் கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த மக்களுடைய கருத்தாகும்.

இந்த நிகழ்வு  நடந்த நிலையில்  அன்று ஆட்சியில் இருந்தவர்கள் மீனவர்களின் பாதுகாப்புகான உத்தரவாதம் அளித்து அவர்கள் காணாமல் போகும் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிப்பதற்கு செயற்கைகோளுடன் இணைந்த தொடர்பு கருவிகள் மேலும் நவீன தொடர்பு கருவிகள் விசைப்படகுகளுக்கும் , நாட்டுப் படைகளுக்கும் வழங்கப்படும். பேரிடர் களங்களில் உடனுக்குடன் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் நிறுத்தப்படும். அதிவேக இயந்திர நவீன வீசைபடகு தரப்படும் என வாக்குறுதி அளித்தனர்.

ஆட்சியாளர்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் வாக்குறுதியாகவே இருந்து வருகிறது. மீன்பிடித் தொழில் மூலம் ஆண்டுக்கு 82 ஆயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலவாணியை ஆட்சியாளரின் கஜானாவை நிரம்பியும், நாட்டு மக்களுக்கு தேவையான சத்தான உணவாக பிரதான சத்து உணவான  மீனை  தனது உயிரைப் பொருட்படுத்தாமல், இந்த நாட்டில் மீன்பிடித் தொழிலை செய்து தான் வாழ்ந்து வரும் மீனவர்களுடைய அடிப்படையான பிரச்சினைகளை கண்டும் காணாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

எனவே  ஆட்சியாளர்கள் மீனவர்களுடைய மீன்பிடி தொழிலுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு அவருடைய உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) சார்பில் வேண்டுகிறோம். இன்று 29.11.2021 ஒக்கி புயல் 4 வது நினைவு நாளில் கிருஷ்ணன்கோவில் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு(சிஐடியு) மாநில பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி, கன்னியாகுமரி மாவட்டம் மீன் தொழிலாளர் சங்கம்  கிருஷ்ணன்கோவில் கிளை நிர்வாகிகள் வில்சன்,அரசு,மீனா,கலாவதி,விமலா,செல்வம்,மஜோரா,சபீதா,செரின், பேசனியோ காஸ்ட்ரோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எழுதுவது : தமிழ்வானம் சுரேஷ்