ஜூட் பெல்லிங்ஹாமால் தனது சாதனையை ஆறு நாட்கள் தான் வைத்திருக்க முடிந்தது.
ஜூன் 13 ம் திகதியன்று உதைபந்தாட்டத்தில் ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளில் விளையாடிய உலகின் மிகக்குறைந்த வயதான வீரனாக அறிமுகப்படுத்தப்பட்டா இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம். அவருக்கு வயது பதினேழு வருடங்கள் 349 நாட்கள் மட்டுமே. கிரவேஷியாவுக்கு எதிராக விளையாடி வெற்றிபெற்ற அந்த மோதலில் 82 வது நிமிடத்தில் பெல்லிங்ஹாம் களத்துக்கு அனுப்பப்பட்டார்.
பெல்லிங்ஹாம் விளையாடித் தனது சாதனையை ஆறு நாட்கள் வைத்திருந்தவுடன் நேற்றுச் சனியன்று போலந்து – ஸ்பெய்ன் மோதல் முடிய பத்து நிமிடங்களுக்கு முன்னர் மைதானத்திற்குக் குதித்தார் கஸ்பர் கொஸ்லோவ்ஸ்கி என்ற போலந்தின் உதைபந்தாட்டக்காரர். ஒக்டோபர் 16, 2003 இல் பிறந்த கொஸ்லோவ்ஸ்கி பெல்லிங்ஹாமை விட மூன்று மாதங்கள் இளையவராகும். யூரோ கோப்பைக்காக விளையாடிய அதி வயதுகுறைந்தவர் என்ற இடம் கொஸ்லோவ்ஸ்கியின் மடியில் வீழ்ந்தது.
போலந்துடன் விளையாடிய ஸ்பெய்ன் கட்டாயமாக வெல்லவேண்டிய நிலைமையிலிருந்தது. தனது முதலாவது மோதலில் சுவீடனை வெல்ல முடியாததால் ஒரேயொரு புள்ளியைப் பெற்றிருந்த ஸ்பெய்ன் எல்லோருடைய எதிர்பார்ப்பின்படி அந்த E குழுவின் முதலிடத்தைப் பெறவேண்டுமானால் பலமான ஒரு வெற்றியைப் பெறவேண்டியிருந்தது.
ஆனால், முதலாவது மோதலில் தோற்றுப்போன போலந்து ஆவேசமான வெற்றிப் பசியுடன் ஸ்பெய்னைச் சந்தித்தது. போலந்து வீரர்களின் வேகத்துக்கும், அதிரடி விளையாட்டுக்கும் முன்னே ஸ்பெய்ன் நாட்டின் நட்சத்திரங்களால் பெரியதாக எதையும் செய்துவிட முடியவில்லை.
ஸ்பெய்ன் வீரர் மொராட்டா வலைக்குள் போட்ட பந்தால் முதலாவது அரைப் பகுதியிலேயே ஸ்பெய்ன் 1 – 0 என்ற இலக்கத்தைப் பெற்றுவிட்டது. மோதலின் இரண்டாம் பகுதியில் அதே மொராட்டா தனக்கு முன்னால் முழுவதுமாகத் திறந்திருந்த வலைக்குள் பந்தைப் போட முடியாமல் தவறிவிட்டார். பெரும்பாலும் பல சந்தர்ப்பங்களை இழப்பவர் என்ற முத்திரையை ஏற்கனவே பெற்றிருந்த மொராட்டா தனது நாட்டின் ஆதரவாளர்களால் ஊளையிடப்பட்டார்.
போலந்தின் சரித்திரத்திலேயே மிகத் திறமையான உதைபந்தாட்ட வீரர் என்று கருதப்படும் ரோபர்ட் லெவண்டோவ்ஸ்கி 52 வது நிமிடத்தில் தனது நாட்டை 1 – 1 என்ற சமநிலைக்குக் கொண்டுவந்தார். ஸ்பெய்ன் வீரர்கள் தங்கள் விளையாட்டின் மீது அதிருப்தி கொண்டு விமர்சித்துக்கொண்டார்கள்.
E குழுவின் முதலிடம் பெறக்கூடுமென்று கணிக்கப்பட்ட ஸ்பெய்ன் அடுத்ததாகச் சந்திக்கப்போகும் ஸ்லோவாக்கியாவை வென்றே ஆகவேண்டும். அப்போதுதான் 5 புள்ளிகளப் பெற்று அடுத்த கட்டத்துக்குப் போகலாம். முதலாவது இடத்திலிருக்கும் சுவீடன் 4 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. இதுவரை ஒரேயொரு புள்ளியைப் பெற்றிருக்கும் போலந்து புதனன்று சுவீடனுடன் மோதவிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்