பஸ்மத்தி அரிசிப் பெயர் யாருக்குச் சொந்தமென்ற அடிபாட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் சமாதானமாகின.
சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னர் அமெரிக்க நிறுவனமொன்று பிரபலமான அரிசிவகையான பஸ்மத்தியை அமெரிக்காவில் தயாரித்து அதற்கு அந்தப் பெயருரிமை கோரியது. பஸ்மத்தி அரிசியைக் காலாகாலமாக விளைவித்துவரும் பாரம்பரியம் கொண்ட இந்தியாவும், பாகிஸ்தானும் அச்சமயத்தில் ஒன்றிணைந்து அது தமது உரிமை என்று வாதிட்டன. புவியியல் ரீதியில் பாகிஸ்தான் – இந்தியப் பிராந்தியத்தில் சரித்திரப் பின்னணி கொண்ட பஸ்மத்தி அரிசிப் பெயரைச் சர்வதேச வர்த்தக அமைப்பு இந்தியா – பாகிஸ்தானுக்கே வழங்கியது.
ஒரு காலத்தில் உலகில் சுமார் 600 வகையான அரிசிகளிருந்தும் எந்த ஒரு வகைக்கும் எவரும் பெயருக்கு சர்வதேச உரிமை கொண்டாடவில்லை. ஆனால், சர்வதேச ரீதியில் பிரபலம் பெற்ற பொருட்களின் பெயர்களின் உரிமையைத் தனதாக்கிக் கொள்வதாலேற்படும் பெரும் இலாபத்தைக் கருதி அவை பற்றிய இழுபறிகள் இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டன.
பஸ்மத்தி அரிசி என்ற பெயரில் டெக்ஸால் நிறுவனமான Rice Tec தனது அரிசி ரகத்தை அழைக்கலாமென்று அமெரிக்காவில் 1997 இல் உரிமை பெற்றுக்கொண்டது. பாகிஸ்தானிய, இந்திய பஸ்மத்தி அரிசி அவர்கள் குறிப்பிடும் புவியியல் பிராந்தியத்தினுள் விளைவிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், டெக்ஸாஸ் நிறுவனம் மேற்கு நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் தமது பஸ்மத்தி அரிசியை விளைவித்து அதற்கு அப்பெயரை இட்டு விற்றுக்கொள்ளலாம்.
சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உணவுக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு இந்தியா அனுப்பியிருக்கும் விண்ணப்பமொன்றில் பஸ்மத்தி அரிசி என்ற பெயரில் இந்தியாவின் குறிப்பிட்ட பிராந்தியங்களில் மட்டும் பயிரிடும் பஸ்மத்தி அரிசியையே அழைக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறது. அதை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்கும் பட்சத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினுள் பஸ்மத்தி அரிசி என்ற பெயரில் இந்திய பஸ்மத்தியை மட்டுமே விற்கலாம்.
“பஸ்மத்தி” அரிசி பற்றிய பெயர்ப்பிரச்சினை பற்றி அறிந்த ஐரோப்பிய ஒன்றியம் பாகிஸ்தானும், இந்தியாவும் ஒன்றிணைந்து பேசி அதுபற்றிய முடிவை அறிவிக்கவேண்டுமென்று சுட்டிக்காட்டி மே மாதம் வரை காலக்கெடு கொடுத்திருந்தது. அக்காலக்கெடு முடிந்துவிட்டதால் இந்தியா மேலும் மூன்று மாதங்கள் கெடுவைக் கேட்டிருந்தது.
உலக பஸ்மத்தி வர்த்தகத்தில் பாகிஸ்தான் 35 % ஐக் கொண்டது. மட்டுமன்றி பாகிஸ்தானின் பஸ்மத்தி அரிசி இந்தியாவினதை விட ருசியில் ஒரு படி அதிகமாகவே பிரபலமானது. ஐரோப்பிய ஒன்றியம் அவ்விரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து அப்பெயரில் ஐரோப்பாவினுள் அவ்வரிசியை விற்கலாம் என்று எதிர்பார்ப்பதை இந்தியா ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பில்லியன்கள் பெறுமதியான இந்த விடயத்தில் தோற்கும் நாடு எதுவானாலும் அது மிகப்பெரும் வர்த்தக இழப்பைச் சந்திப்பதுடன் இவ்விரு நாடுகளுக்குள் இது கௌரவப் பிரச்சினையும் கூட.
இரண்டு நாடுகள் ஒரே விதமான தயாரிப்புக்கான பெயருரிமையைக் கோரும் இது போன்ற சமயத்தில் அதை இருவருமே தனித்தனியாகத் தமது பெயருடன் இணைத்துப் போட்டுக்கொள்ளலாம் என்று ஜப்பான் காட்டியிருக்கிறது. பிஸ்கோ என்ற மதுபானத்துக்குப் பெருவும் சிலேயும் உரிமை கொண்டாடவே அப்பானத்தை பெருவின் பிஸ்கோ, சிலேயின் பிஸ்கோ என்ற பெயரில் ஜப்பானில் விற்க அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.
கடைசிக் கட்டத்தில் பாகிஸ்தானும், இந்தியாவும் வேறு வழியின்றி ஐரோப்பிய ஒன்றியம் பிரேரித்தபடி அந்தப் பெயரை இரண்டு நாட்டின் பஸ்மத்தி அரிசித் தயாரிப்பாளர்களும் வைத்துக்கொள்ளலாம் என்று ஏற்றுக்கொண்டன. பஸ்மத்தி அரிசி ஏற்றுமதி மூலம் இந்தியா வருடாவருடம் 6.8 பில்லியன் டொலர்களையும், பாகிஸ்தான் 2.2 பில்லியன் டொலர்களையும் ஏற்றுமதி மூலம் பெற்று வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்