வருடாவருடம் மூன்று மில்லியன் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பிரான்சின் மேற்கிலிருக்கும் ஒரு அழகிய தலம்.

பிரான்சின் மேற்குக் கடற்கரையோரமாக இருக்கும் மொண்ட் சென் மிஷேல் அத்திலாந்திக் கடலிலிருக்கும் மொண்ட் தொம்பே என்ற குன்றின் மீதிருக்கும் தலமாகும். கி.பி 708 இல் Aubert av Avranches என்ற மேற்றிராணியாரின் கனவில் தேவதூதன் மைக்கல் வந்து இட்ட உத்தரவின்படி அவர் அந்தக் குன்றில் ஒரு தேவாலயத்தைக் கட்டினார் என்று குறிப்பிடப்படுகிறது.

சுமார் 40 பேர் குடியிருக்கும் மடாலயமான மொண்ட் மிஷலைச் சுற்றி சந்திரனின் ஈர்ப்புச் சக்தியால் ஏற்படும் நீர்மட்டத்தைப் பொறுத்து அது நிலத்துடன் சேர்ந்ததா, அல்லது தீவா என்று வரையறுக்கப்படும். ஏனென்றால் அது ஐரோப்பாவிலேயே அதிக உயரத்துக்கு நீர்மட்டம் உயரும் இடமாகும். அச்சமயத்தில் அது ஒரு நீருக்குள்ளிருக்கும் தனித் தீவாகத் தோற்றமளிக்கும்.

கட்டப்பட்ட தேவாலயத்தைச் சுற்றி மடாலயமமைக்கும் கட்டடங்கள் 1000 ஆண்டுகளில் ஆரம்பமானது. 1080 – 1084 ஆண்டுகளில் அங்கே வரும் துறவிகள் தங்குமிடங்களும், அவர்களுக்குத் தேவையான உணவுச்சாலைகளும் கட்டியெழுப்பப்பட்டன.

பல தடவைகள் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன. தீவிபத்துக்களால் கட்டடங்கள் சில அழிந்தன, மீண்டும் கட்டியெழுப்பப்பட்டன. 1780 இல் தற்காலத்தில் காணக்கூடிய கட்டட முகப்புக்கள் தயார்செய்யப்பட்டன.

1789 இல் பிரான்சில் ஏற்பட்ட புரட்சியின் சமயத்தில் ஏற்பட்ட மாறுதல்களால் அந்த மடாலயம் முழுசாக மூடப்பட்டு ஒரு சிறையாக மாற்றப்பட்டது.

பிரபல பிரென்ச் எழுத்தாளர் விக்டர் ஹியூகோ அந்தச் சிறையை மூடி அங்கே மீண்டும் பழைய களையை உண்டாக்கவேண்டுமென்று குரல்கொடுத்தார். அவருடைய குரலின் விளைவால் 1863 இல் சிறை மூடப்பட்டு 1874 இல் மொண்ட் சன் மிஷல் மீண்டும் திறக்கப்பட்டது மக்களுக்காக. அது ஒரு சரித்திர, கலாச்சார தலமாகப் பேணப்பட்டு வருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *