யூரோ 2021 இல் அடுத்த மட்டப் போட்டிகளுக்குப் போகும் மூன்று நாடுகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
ஐரோப்பிய கோப்பைக்கான உதைபந்தாட்டப் போட்டிகளில் மோதல்கள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளின் நடந்த மோதல்களில் எதிர்பாராத முடிவுகளைக் காணமுடிந்தது. ஞாயிறன்று நடந்த இரண்டு மோதல்களோ எதிர்பார்த்தபடியே முடிந்தன.
பலமான விளையாட்டு நுட்பத்துடனான இத்தாலியக் குழு வேல்ஸ் குழுவைச் சந்தித்தது. இன்னொரு மோதலில் சுவிஸ், துருக்கியை எதிர்கொண்டது. A குழுவினருக்கிடையே நடந்த மோதல்களில் இத்தாலி 1 – 0 என்ற முடிவையும், சுவிஸ் 3 – 1 என்ற முடிவையும் பெற்று வெற்றியடைந்தன. இந்தப் போட்டிகளில் மோதும் குழுக்களிடையே மிகவும் குறைந்த புள்ளிகளைப் பெற்ற துருக்கி [- 7] அடுத்த கட்டப் போட்டிகளில் பங்குபற்றாது என்று தெளிவு.
மற்றைய குழுக்களிடையே முதல் கட்ட மோதல்களெல்லாம் புதனன்றே முடிவடையும். நேற்றைய மோதல்களின் பின்னர் இத்தாலி, நெதர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் அடுத்த கட்டத்துக்கான போட்டிகளுக்கு முன்னேறியிருக்கின்றன.
ஐந்து குழுக்களில் போட்டியிடும் 20 நாடுகளிலும் ஒவ்வொரு குழுவின் முதலிரண்டு நாடுகளும் அடுத்த மட்டத்துக்குத் தெரிவாகும். அடுத்த கட்ட 8 மோதல்களுக்கு 16 நாடுகள் தெரிவாகும். எனவே ஐந்து குழுக்களின் முதலிரண்டு நாடுகள் தவிர மூன்றாவது இடத்திலிருக்கும் அதிக புள்ளிகள் பெற்ற நாடுகளில் 6 நாடுகளுக்கு அங்கே முன்னேறச் சந்தர்ப்பமிருக்கிறது. அவைகள் குழுக்கள் போட்ட கோல்கள், அவர்களுக்கு எதிராக விழுந்த கோல்கள் போன்றவைகளையெல்லாம் கணக்கிட்டே அறிவிக்கப்படுமென்பதால் கடைசி நாள் வரை அவற்றின் விபரங்கள் தெரியாது.
A, B, C தவிர்ந்த மற்றைய குழுக்களின் முதலிட நாடுகள் தமது மோதல்களிலெல்லாம் வெற்றியடையவில்லை. அதனால் அவர்களின் புள்ளிகளும் A குழுவிலிருக்கும் சுவிஸின் புளிகளும் ஒரேயளவாக இருக்கின்றன. அந்தக் குழுக்களின் மோதல்களில் வரும் நாட்களில் எதுவும் நடக்கலாம் என்ற நிலைமை.
புதனன்று நடக்கவிருக்கும் பிரான்ஸ் – போர்த்துக்கல், ஜேர்மனி – ஹங்கேரி, சுவீடன் – போலந்து போன்றவை இன்றிருக்கும் மற்றக் குழுக்களின் முதலாவது இடங்களின் நாடுகளையே மாற்றியமைக்கலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்