மியூனிச் அரங்கத்தில் நாளைய ஜேர்மனி – ஹங்கேரி மோதலின்போது அரங்கை வானவில் நிறங்களில் ஒளிரவைக்கத் தடை.
ஹங்கேரியப் பாராளுமன்றத்தில் சமீபத்தில் ஓரினச் சேர்க்கை – வெறுப்புணர்வை ஊட்டும் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டது. அதற்கு எதிர்ப்புக் காட்டுமுகமாக நாளை ஜேர்மனியின் மியூனிச் நகரில் நடக்கவிருக்கும் உதைபந்தாட்டப் போட்டியின்போது அந்த அரங்கை வானவில் நிறங்களால் சோடித்து மிளிரவைக்க மியூனிச் நகரும், ஜேர்மனிய அரசும் விரும்பின. அதற்குப் பல கோணங்களிலிருந்தும் பலத்த ஆதரவு கிடைத்தது. ஆனால், ஐரோப்பிய கால்பந்தாட்ட மத்திய அமைப்பு அதற்கான அனுமதியைக் கொடுக்கவில்லை.
ஹங்கேரியப் பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட சட்டத்தின்படி நாட்டின் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஓரினச் சேர்க்கை பற்றிய எந்த விதத்திலும் அறியவைக்கலாகாது. அது போலவே பாலின மாற்றம் செய்தல், அது பற்றிய உணர்வுகள் பற்றியும் அவர்களுக்கு அறியச் செய்யலாகாது. அப்படியான விபரங்கள் பாடசாலைப் புத்தகங்களிலிருந்து, நிறுவனங்களின் விளம்பரங்கள் வரை தடைசெய்யப்பட்டன.
கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டத்தின் அர்த்தம், அப்படியான பாலின உணர்வுகள், பாலினச் சேர்க்கைகள் உண்டாகக் காரணம் அது பற்றிப் பிள்ளைகளுக்கு அறியவைப்பதுதான் என்பதாகும். அப்படியான உறவுகள் தவிர்க்கப்படவேண்டியவை, வெறுத்து ஒதுக்கப்படவேண்டியவை என்கிறது ஹங்கேரியின் ஆளும் கட்சி அரசு. எனவே அவற்றை அறிந்துகொள்ளாமல் வளர்வதன் மூலம் நாட்டுக்கு “நல்ல குடிமக்கள்” கிடைப்பார்கள் என்று நம்பப்பட்டே அச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
“வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய வித்தியாசமானவர்கள்” என்று சிறுபான்மைக் குழுக்களை ஒதுக்குவது அவர்கள் மீது வெறுப்பை வளர்ப்பது போன்றவை மனித உரிமைகளுக்கு எதிரானவை என்று ஐரோப்பிய நாடுகள் பலவும் விமர்சிக்கின்றன. ஹங்கேரியிலும் அச்சட்டத்துக்கெதிரான ஊர்வலங்கள் நடாத்தப்பட்டாலும் அரசு அவைகளை ஒதுக்கிவிட்டுச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது.
அப்படியான மாற்றுப் பாலுணர்வு கொண்டவர்களின் (LGBTIQ community) குழுக்களின் சின்னமாகவே வானவில் கருதப்படுகிறது. எனவே தான் ஹங்கேரியின் அச்செயலை உலகுக்கு முன்னர் விமர்சிக்க உதைபந்தாட்ட அரங்கத்தை வானவில் நிறங்களில் ஒளிரவைக்க மியூனிச் விரும்பியது.
“ஐரோப்பிய உதைபந்தாட்ட அமைப்பானது [UEFA] அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பு. ஒரு நாட்டின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை விமர்சிக்க அதன் விளையாட்டைப் பாவிப்பது விரும்பத்தகுந்ததல்ல,” என்று மியூனிச் நகரின் விருப்பம் மறுக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய உதைபந்தாட்ட அமைப்பின் மறுப்பைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார் மியூனிச் நகரத் தலைவர். அரங்கை வானவில் நிறங்களால் ஒளிரவைக்க முடியாவிட்டாலும் நகரிலிருக்கும் மற்றைய முக்கிய இடங்களை அந்த நிறங்களால் ஒளிரவைத்துச் சோடித்து, ஓரினச் சேர்க்கையாளர் உட்பட்ட சிறுபான்மையினருக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கவிருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்