ஜேர்மன் பியர் பிரியர்களின் ஒக்டோபர் விழாவை டுபாய்க்காரன் புடுங்க முற்படுவதை மியூனிச் நகரம் எதிர்க்கிறது.

முழு விபரங்களும் வெளியிடப்படாமல் டுபாயில் “ஒக்டோபர்வெஸ்ட்” எனப்படும் பியர்ப் பிரியர்களின் விழாவின் நகலை நடத்தவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பெர்லின் நத்தார் சந்தையை நடாத்திவரும் சார்ல்ஸ் புளூம் என்பவரும், ஜெர்மனியிலிருந்து டுபாய்க்குப் புலம்பெயர்ந்துவாழும் ஒரு உணவக உரிமையாளரும் சேர்ந்து டுபாயில் அவ்விழாவை ஒழுங்குசெய்யப்போவதாக மட்டும் தெரியவந்திருந்தது. 

ஜெர்மனியின் உலகப் பிரபலமான ஒக்டோபர் விழா, அந்த நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பவரியா அரசகுமாரனின் திருமண விழாவைக் கொண்டாடுவதற்காக 1810 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் வெற்றி ஜேர்மனியின் பியர் தயாரிப்பாளர்கள் தமது தயாரிப்புக்களைச் சந்தைப்படுத்துவதற்கு ஒரு முக்கிய தளமாகிவிடவே, அது வருடாவருடம் கொண்டாடப்படும் ஒரு மிகப்பெரும் மக்கள் விழாவாகியிருக்கிறது. 

அந்த விழாத்தருணத்தில் உலகின் பல பாகங்களிலிருக்கும் நகரங்களிலும் பியர் பிரியர்களை ஒன்றிணைத்து தவறணைகளில் ஒக்டோபர் விழா கொண்டாடப்படுவதுண்டு. ஆனாலும், ஜெர்மனியின் மியூனிச் நகரமே அதன் ஆரம்பப் புள்ளி என்பதால் அங்கே நடக்கும் ஒக்டோபர் விழா தான் “உண்மையான ஒக்டோபர்வெஸ்ட்” என்று அறியப்படுகிறது. 

கொரோனத் தொற்றுக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளால் கடந்த வருடம் அவ்விழா நடாத்தப்படவில்லை. இந்த வருடமும் அதற்கான அனுமதி கொடுக்கப்படுமோ என்பது கேள்விக்குறியே. அச்சமயத்தில் டுபாய் அதை நடத்துவதானால் மியூனிச் நகரின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று கருதுவதாலோ என்னவோ அந்த  விழாவை ஒழுங்கு செய்யும் கிளெம்மன்ஸ் பவும்யார்ட்னர் அந்த நகருடன் சேர்ந்து எதிர்ப்புக் கொடியைத் தூக்கியிருக்கிறார். 

“டுபாய் ஒக்டோபர்வெஸ்டை நடத்துவதென்பது அபத்தமானது. கடந்த வருடம் நடத்தமுடியாத அந்த விழா இவ்வருடம் நடாத்தப்படக்கூடிய சாத்தியமிருக்கும்போது யாரோ அதை டுபாய்க்குக் கொண்டுசெல்ல முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்கிறார் பவும்யார்ட்னர். அப்படியொரு திட்டமிருப்பின் மியூனிச் நகரத்துடன் கலந்தாலோசித்து சட்டபூர்வமாக டுபாய் அவ்விழாவைப் பறித்தெடுப்பதைத் தடுக்கவேண்டுமென்ற்கிறார் அவர். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *