திருமணம் செய்துகொண்ட ஜப்பானியர்களுக்கு வெவ்வேறு குடும்பப் பெயர்களை வைத்துக்கொள்ள உரிமையில்லை.
ஜப்பானைச் சேர்ந்த மூன்று தம்பதிகள் தாம் திருமணம் செய்துகொண்ட பிறகும் தமது முன்னாள் குடும்பப் பெயரையே வைத்திருக்க அனுமதி கேட்டு நீதிமன்றம் போயிருந்தார்கள். ஜப்பானியச் சட்டப்படி கல்யாணம் செய்துகொண்ட இருவர் ஒரேயொரு குடும்பப் பெயரையே கொண்டிருக்கலாம்.
தமது இஷ்டப்படி வெவ்வேறு குடும்பப் பெயரை வைத்திருக்க உரிமை கோரி உச்ச நீதிமன்றம் வரை போயும் அது கிடைக்கவில்லை. அவர்களுடைய கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
பல பழமைவாதக் கோட்பாடுகளைப் பாரம்பரியமாகக் கொண்ட ஜப்பானில் சமீப காலத்தில் தமது குடும்பப் பெயரையே வைத்துக்கொள்ளும் உரிமை கோருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சிகளுக்குள்ளும் அதை ஆதரிப்போர் அதிகரித்து வருகிறார்கள். ஆனால், நீண்டகால ஆளும் கட்சியாக இருக்கும் லிபரல் டெமொகிரடிக் கட்சியினுள் அதற்கான ஆதரவு குறைவு.
வெவ்வேறு குடும்பப் பெயருள்ள இருவரின் குடும்பத்தினுள் ஒற்றுமை குறையும், பிரச்சினைகள் ஏற்படும் என்று காரணம் குறிப்பிட்டு அதை மறுத்து வருகிறார்கள் நாட்டின் பிரதமர் உட்பட்ட பல அரசியல் தலைவர்கள்.
சாள்ஸ். ஜெ. போமன்