சுயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட சரக்குக்கப்பலை விடுவிக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
கப்பல் நிறையச் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பா நோக்கி வந்துகொண்டிருந்த எவர் கிவன் கப்பல் சுயஸ் கால்வாய்க்குள் மாட்டிக்கொண்டு சுமார் மூன்று மாதமாகி விட்டது. கப்பல் கால்வாயிலிருந்து அகற்றப்பட்டதும் அதிலிருந்து பொருட்களுடன் சேர்த்து எகிப்தின் சுயஸ் கால்வாய் அதிகாரத்தால் கைப்பற்றப்பட்டிருந்தது.
கப்பலில் கோளாறுகளிருந்தனவா ? என்ற கேள்வியில் தொடங்கி அது கால்வாயை அடைத்துப் போக்குவரத்தை ஸ்தம்பிதப்படுத்தியிருந்ததற்கான நஷ்ட ஈடு கொடுக்கவேண்டுமென்பது வரை அக்கதை நீண்டது. அதி முக்கிய நீர்ப் போக்குவரத்துப் பாதையாக இருக்கும் சுயஸ் கால்வாய் மூடப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டத்தைக் கப்பலின் உரிமையாளர்கள் கொடுக்கவேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
நஷ்ட ஈட்டுத் தொகை எவ்வளவு, யாரால் யாருக்குக் கொடுக்கப்பட வேண்டும் போன்றவைகளில் ஏற்பட்ட இழுபறிகளாலும், கேட்கப்பட்ட பல மில்லியன் டொலர்கள் நியாயமானதா என்ற விவாதங்களாலும் கப்பல் தொடர்ந்தும் எகிப்திலேயே நிற்கிறது.
கடையாக வந்திருக்கும் செய்தியின்படி கப்பல் உரிமையாளர்கள், காப்புறுதி நிறுவனங்கள் ஆகியோர் எகிப்திய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளை முடித்திருப்பதாகத் தெரிகிறது. அத்தொகை என்னவென்ற விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. நஷ்ட ஈடாகக் கேட்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேலாக இருந்து பாதியாகக் குறைக்கப்பட்டதாகக் கடைசியாகச் செய்திகள் வந்திருந்தன.
எவர் கிவன் கப்பலை எகிப்தின் பிடியிலிருந்து வெளியேற அனுமதிப்பதற்கான கடைசி ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்