குறிப்பிட்ட சில துறைகளில் தொழிலாளிகள் தட்டுப்பாட்டால் குடியேறுகிறவர்கள் வேண்டுமென்கிறது பின்லாந்து. ஆனால் …..
உலகின் மிகவும் சந்தோசமான மக்கள் என்று பல தடவைகள் முடிசூடப்பட்ட நாட்டின் குடிமக்களில் 39 விகிதத்துக்கும் அதிகமானோர் 65 வயதைத் தாண்டிவிட்டார்கள். அதாவது வேலையிலிருந்து ஓய்வுபெற்றவர்களின் விகிதம் மொத்தச் சனத்தொகையில் பெரும்பங்காகிவருகிறது. அங்கே 2030 இல் ஓய்வு வயதை எட்டியவர்கள் நாட்டின் 47.5 விகிதமாகிவிட்டிருப்பார்கள் என்கிறது புள்ளிவிபரக் கணிப்பீடு. இதைப் புரிந்துகொள்ள இந்தியாவின் 65 வயதுக்கு மேலானவர்கள் மொத்த சனத்தொகையின் 6.4 விகிதமே என்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
பின்லாந்து தனது குடிமக்களுக்கு மிகவும் உயர்தர சேவைகளைச் செய்யும் நாடாகும். அதேபோலவே கல்வித் தரத்திலும் உயர்ந்தது. தொழிலாளிகளுக்கான உரிமைகளும், வசதிகளும் பேணப்படும் நாடாகும். அங்கே அதேயளவு உயர்ந்த சேவைகளைத் தொடரவேண்டுமானால் வருடாவருடம் சுமார் 20,000 – 30,000 பேரைக் குடியேற அனுமதிக்கவேண்டுமென்று பின்லாந்து அரசு குறிப்பிட்டு வருகிறது.
சில வருடங்களுக்கு முன்னர் பின்லாந்து திட்டமிட்டு தெற்கு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து குறிப்பிட்ட துறைகளுக்கு தொழிலாளிகளைக் கொண்டுவந்தது. ஆனால், பின்லாந்தின் உயர்ந்த வருமான வரி, குளிர் காலநிலை, தனிமை போன்றவைகளால் அங்கு குடியேற்றக் கொண்டுவரப்பட்ட பிரத்தியேகத் துறையைச் சேர்ந்தவர்கள் நீண்டகாலம் நிலைப்பதில்லை.
அதைத் தவிர மற்றைய நாடுகளின் கல்வித்துறைத் தரம், பிரத்தியேகத் திறமை போன்றவைகளைப் பின்லாந்தின் நிறுவனங்கள் இலகுவாக ஏற்றுக்கொள்வதில்லை. ஐரோப்பியர் தவிர்ந்த வெளிநாட்டவர்கள் மீதான இனத் துவேஷமும் பின்லாந்தில் கணிசமான அளவுக்கு இருக்கிறது.
கொரோனாத் தொற்றுக்கள் காலத்தில் பின்லாந்து தனது எல்லைகளை வெளிநாடுகளுடன் மூடியிருந்தது. நகரங்களும் அவ்வப்போது தேவைக்கேற்றபடி மூடப்பட்டுக் கடுமையான கட்டுப்பாடுகள் எடுக்கப்பட்டிருந்தன. பக்கத்து நாடுகளுடன் கூட எல்லைகள் மூடியிருந்ததால் பல தடவைகள் பெரும் விமர்சனங்களை எதிர் நோக்கியது.
5.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பின்லாந்தில் கொரோனாத் தொற்றால் இறந்தவர்கள் தொகை ஆயிரத்துக்கும் குறைவானதே என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் இப்பெரும் வியாதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த முதன்மையான நாடுகளில் பின்லாந்தும் ஒன்று என்று கணிக்கப்படுகிறது. எனவே தனது மக்கள் மீது கவனம் செலுத்திச் செயற்படும் நாடு என்ற பெயரும் சேர்ந்து வரும் வருடங்களில் வெளிநாடுகளிலிருந்து குறிப்பிட்ட சில திறமைகளைப் பின்லாந்துக்குக் குடியேற ஈர்க்க முடியுமென்று கருதுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்