பாரிஸ் எலெக்றிக் உருளி விபத்து :இத்தாலிப் பெண்ணை மோதிவிட்டுஓடிய இரு யுவதிகளும் தாதியர்கள்!
இருவரும் கைதாகித் தடுத்து வைப்பு.
எலெக்றிக் உருளியால் பெண் ஒருவரை மோதி விட்டுத் தப்பிச் சென்றவர்கள் எனக் கூறப்படும் இரண்டுஇளம் யுவதிகளும் கைது செய்யப்பட்டுத்தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாரிஸின் புற நகரங்களாகிய Noisy-le-Grand (Seine-Saint-Denis) Villiers-sur-Marne (Val-de-Marne) ஆகிய இடங்களில் வசிக்கின்ற இருவரும் அவர்களது இல்லங்களில் வைத்துப் பொலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.25 வயது மதிக்கத்தக்க யுவதிகள் இருவரும் தாதியர்கள் (infirmières) எனத் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த நாளின் மாலை வேளை இருவரும் மது போதையில் இருந்தனர்என்பது தெரியவந்துள்ளதாக பரிஷியன்பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
பாரிஸ் நகரில் கடந்த 14 ஆம் திகதி இரவுநேரம் இடம்பெற்ற இந்த விபத்தில் 31வயதான இத்தாலியப் பெண் ஒருவர்தலையில் காயமடைந்து பின்னர் உயிரிழந்தார். வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த அவர் மீது மோதிய எலெக்றிக் உருளியில் வந்த இளம் யுவதிகள் இருவரும் தரிக்காமல் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்தனர். உயிரிழந்தவர் இத்தாலியஉணவகம் ஒன்றில் பணி புரிபவர்.வேலை முடிந்து நண்பி ஒருவருடன் வீதியில் வந்துகொண்டிருந்த சமயத்திலேயே எலெக்றிக் உருளி அவரை மோதி வீழ்த்தியது.
நகரில் எலெக்றிக் உருளிகளின் (trottinettes électrique) பாவனை அதிகரித்துள்ளது. அதனால் அடிக்கடி விபத்துக்களும் இடம்பெறுகின்றன.
குமாரதாஸன். பாரிஸ்.