இந்திய நகரங்கள் இரண்டில் பொய்யான கொவிட் 19 தடுப்பூசிகள் போடப்பட்டதை பொலீஸார் கண்டுபிடித்தனர்.
இந்தியாவில் சமீபத்தில் மிக மோசமாகப் பரவிய கொரோனாத் தொற்றுக்களையும், அதனால் ஏற்பட்ட இறப்புக்களும் ஏற்படுத்த விமர்சனங்களையடுத்து அரசு சகலருக்கும் இலவச கொவிட் 19 தடுப்பு மருந்துகள் கிடைக்கும் என்று அறிவித்தது. அதன் பின்னர் படிப்படியாக அதிகரித்துவரும் தடுப்பு மருந்துகள் கொடுத்தலில் இரண்டு நகரங்களில் மோசடிகள் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
மும்பாயில் சுமார் 2,000, பேருக்கும், கோல்கத்தாவில் சுமார் 500 பேருக்கும் கொவிஷீல்ட் தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதாகச் சொல்லி வெறும் உப்புக் கரைசலையே கொடுத்திருக்கிறார்கள். கோல்கத்தாவில் அந்த மோசடிக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சில நூறு பேர் அங்கவீனர்களும், பால் மாற்றம் செய்துகொண்டவர்களுமாகும்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான மிமி சக்கரபோர்த்தியும் அந்த மோசடிக்குக் கல்கத்தாவில் உட்படுத்தப்பட்டார். ஒரு குறிப்பிட்ட தடுப்பு மருந்துச் சாலை பற்றி அவருக்கு எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர் பொலீசாரிடம் முறையிட்டதன் மூலமே அந்த மோசடி வெளிவந்திருக்கிறது.
மருத்துவ விற்பன்னர், மருத்துவர்கள், சேவையாளர்கள் என்று குறிப்பிடப்படும் டசினுக்கு மேற்பட்டோரைப் பொலீசார் அந்த மோசடிகளுக்காகக் கைது செய்திருக்கிறார்கள். பொய்த் தடுப்பூசி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் சுமார் எட்டு தடுப்பூசி முகாம்களை நிர்வாகித்து வந்ததாகத் தெரிகிறது.
உண்மையான தடுப்பூசியல்ல என்று தெரியவந்ததால் அதைப் போட்டுக்கொண்டவர்களில் பலர் தமக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகளால் ஏதாவது பக்க விளைவுகளோ, நோய்களோ ஏற்படலாமென்று பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்