யூரோ 2020 காலிறுதி மோதலுக்குப் போகும் போட்டிகளில் டென்மார்க் தன் பலத்தையும், இத்தாலி தனது தளம்பலையும் வெளிக்காட்டின.
இரண்டு நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் சனியன்று மாலை யூரோ 2020 கோப்பைக்கான காலிறுதிப் போட்டிக்குப் போகிறவர்களின் முதலிரண்டு மோதல்களும் நடந்தன. ஆம்ஸ்டர்டாமில் டென்மார்க்கும், வேல்ஸ் அணியும் மோத, இத்தாலியும், ஆஸ்திரியா அணிகள் லண்டனில் மோதின.
கடைசியாகத் தான் மோதிய ரஷ்ய அணியை 4 – 1 என்ற வித்தியாசத்தில் நொறுக்கிய டென்மார்க்கின் அணி வேல்ஸ் அணியை வெற்றிகொள்ளும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. தனது முக்கிய அதிரடி வீரர்களான் யூசுப் போல்சன், டேனியல் வஸ் ஆகிய இருவரும் இல்லாமலே களத்திலிறங்கியது.
கடந்த மோதலில் காயமடைந்த போல்சனுக்குப் பதிலாக கஸ்பர் டோல்பர்க் களத்தில் இறக்கப்பட்டார். மோதலின் ஆரம்பத்தில் இரண்டு அணிகளுமே சமமானவையோ என்று தோன்றியது. சுமார் அரை மணித்தியாலத்ம் ஆகியிருக்கும் ஜோக்கிம் மேஹெலெ பந்தை மறித்து நீண்ட தூரத்தில் வேல்ஸ் பாதுகாப்பு அணிக்கு நடுவே நின்ற டம்ஸ்கோர்ட்டிடம் கொடுத்தார். அழகாக அப்பந்தை எடுத்து டோல்பர்க்கிடம் அவர் கொடுக்க, பந்தை வலைக்குள் இறக்கினார் டோல்பர்க்.
மோதலின் இரண்டாம் பகுதி ஆரம்பித்தபோது அரங்கிலிருந்த டேனிஷ் ஆதரவாளர்களிடையே சக்தி பரவியிருந்தது. நாட்டின் பிரதமர் மெத்தெ பிரடெரிக்சனும் அங்கே வந்திருந்தார். டென்மார்க் அணி புத்துயிர் பெற்றது போல மீண்டும் மீண்டும் தாக்கிக்கொண்டிருக்க இரண்டாவது முறையும் டோல்பர்க் பந்தை வலைக்குள் இறக்கினார்.
டென்மார்க்கைப் பற்றி அதன் பின் அதிகமாக ஏதும் குறிப்பிடத் தேவையில்லை. வேல்ஸ் அணியைத் தவிடுபொடியாக்கி 4 – 0 என்று வெற்றியைப் பொறித்தார்கள் டேனிஷ்காரர்கள்.
இரண்டாவது மோதலான இத்தாலி – ஆஸ்திரியாவோ எதிர்பார்க்கப்பட்டதை விட சவ்வு போல இழுபட்டது. பல தடவைகள் உலகக் கோப்பை, ஐரோப்பியக் கோப்பையை வென்ற நட்சத்திர விரர்களாலான அணி ஆஸ்திரியாவுக்கு எதிராகத் தடுமாறியது தெளிவாகத் தெரிந்தது. ஆஸ்திரியாவின் மார்க்கோ ஆர்னாட்டோவிச் இத்தாலிய அணிக்கெதிராக நடத்திய தாக்குதல்களே மோதலின் மிக அழகான, நுட்பமான காட்சிகளாக இருந்தன.
மார்க்கோ அர்னாட்டோவிச் 65 வது நிமிடத்தில் தனது தலையால் பந்தை வலைக்குள் போட்டார். ஆனால், மில்லி மீற்றர் வித்தியாசத்தில் அவர் அடுத்த பக்கத்தினுள் பந்துக்கு முன்னர் நுழைந்துவிட்டதால் அது நிராகரிக்கப்பட்டது.
90 நிமிடங்களைத் தாண்டியும் இழுபட்ட மோதலில் முடிவெதுவும் இல்லாததால் நேரம் அதிகரிக்கப்பட்டு மீண்டும் விளையாட்டுத் தொடர்ந்தது. ஒரு வழியாக இத்தாலி ஆஸ்திரிய வலைக்குள் பந்தை நுழைத்தது. அதையடுத்துத் தொடர்ந்து விளையாடி முடித்தபோது ஆஸ்திரியாவும் ஒரு தடவை கோல் போட கடைசியான முடிவு 2 – 1 என்று ஆகியது.
சாள்ஸ் ஜெ. போமன்