இந்தோனேசிய உதைபந்தாட்டக்குழு விசிறிகள்- பொலீஸ் மோதலில் 174 பேர் மரணம்.

இரண்டு தசாப்தங்களில் முதல் தடவையாகத் தாம் ஆதரிக்கும் உதைபந்தாட்டக்குழு Arema FC தோற்றுப் போனதை அறிந்ததும் மைதானத்துக்குள் நுழைந்து கலவரம் செய்தார்கள். 2 -3 என்ற எண்ணிக்கையில் அவ்விசிறிகளின் அணி தோற்றிருந்தது. அவர்களைத் தடுக்க முயன்ற பொலீசாருடன் மோதியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 174 ஆகும்.

மைதானத்துக்குள் நுழைந்த விசிறிகளைக் கட்டுப்படுத்துவதற்காக முயன்ற பொலீசாரை அவர்கள் தாக்கவே நிலைமையைக் கலவரமாகக் கணித்த பொலீசார் கண்ணீர்ப் புகையைப் பாவித்தனர். தாக்கப்பட்ட பொலீசாரில் இருவர் இறந்திருக்கிறார்கள். மைதானத்துக்குள்ளிருந்து வெளியாகிய படங்கள் நடந்ததன் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன. பெருமளவில் கண்ணீர்ப் புகை பாவிக்கப்பட்டது. தாக்கப்பட்டுக் காயப்பட்டவர்களை மற்றைய ரசிகர்கள் தூக்கிக்கொண்டு வெளி மதிலுக்கு மேலால் தப்பியோடியதையும் காணமுடிகிறது. அச்சமயத்தில் பலர் மிதிபட்டு இறந்தார்கள்.

 Arema FC அணியின் தீவிர விசிறிகள் வரவிருக்கும் இவ்வருட மோதல்களெவற்றையும் காண அனுமதிக்க முடியாதென்று இந்தோனேசிய உதைபந்தாட்ட அமைப்பு அறிவித்திருக்கிறது. ஒரு வார காலத்துக்கு எந்த உதைபந்தாட்ட மோதலும் நடக்கலாகாது என்றும் அவர்கள் நிறுத்தியிருக்கிறார்கள்.

மைதானத்தில் நடந்ததற்கும், இறப்புகளுக்கும் இந்தோனேசிய அரசு மன்னிப்புக் கேட்டுக்கொண்டதுடன் நடந்தவைகளின் விபரங்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *