வலதுசாரி வலெரி பெக்ரெஸ் பாரிஸில் மீண்டும் வென்றார்!
நம்பிய ஒரு பிராந்தியத்தையும்கோட்டை விட்டது லூ பென் கட்சி.
இன்று நடைபெற்று முடிந்த பிராந்திய சபைகளுக்கான தேர்தல்களின் இறுதிச் சுற்றின் முடிவுகள் வெளியாகி வருகின் றன. பாரம்பரியக் கட்சிகளில் ஒன்றான ரிப்பப்ளிக்கன் (Républicains) வேட்பாளர்களுக்கு இம்முறை வெற்றி வாய்ப்புகள்குவிந்துள்ளன. மற்றொரு பாரம்பரியக் கட்சியான சோசலிஸக் கட்சியும் அதன் பிராந்தியங்களைத் தக்க வைத்துள்ளது. மரின் லூ பெனின் தீவிர வலதுசாரிக் கட்சி அதிர்ச்சித் தோல்விகளைச் சந்திக்க நேர்ந்துள்ளது. எந்த வெற்றி வாய்ப்புகளையும் எட்ட முடியாமல் மக்ரோனின்ஆளும் கட்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
பாரிஸ் பிராந்தியத்தில் எதிர்பார்கப்பட்டவாறே வலதுசாரி வேட்பாளர் வலெரி பெக்ரெஸ் (Valérie Pecresse) அதிகப்படி யான வாக்குகளால் வென்றிருக்கிறார். 44.9% வீத வாக்குகளால் அவர் பாரிஸ் பிராந்தியத்தின் தலைவியாக இரண்டாவது முறையாகவும் தெரிவாகியுள்ளார்.சூழலியலாளர் ஜூலியன் பயோ (Julien Bayou) தலைமையில் ஓரணியாகப் போட்டியிட்ட இடதுசாரிகள் – பசுமைக் கூட்டணி 33.3% வீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையே பெற முடிந்துள்ளது. பிரான்ஸின் சோசலிஸக் கட்சியும்( PS) அந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது.
வரலாற்றில் மிக மிக அதிகமானோர்(65%) வாக்களிப்பில் கலந்து கொள்ளாததேர்தலாகப் பதிவாகி இருக்கின்ற இந்ததேர்தலில் அநேகமாக எல்லா பிராந்தியங்களிலும் ஏற்கனவே பதவியில் இருந்தவர்களே மீண்டும் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால் தேசிய அரசியலில் வலுப்பெற்று வருகின்ற கட்சிஎன்று கருதப்பட்ட தீவிர வலதுசாரிமரின் லூ பெனின் Rassemblement National (RN) கட்சியால் எந்த ஒரு பிராந்தியத்திலும் வெல்ல முடியாமற் போயிருக்கின்றது.
நாட்டின் தெற்கே சுருக்கமாக Paca என அழைக்கப்படுகின்ற Provence-Alpes- Côte-d’Azur பிராந்தியம் மரின் லூ பென் கட்சிக்கு இந்த முறை முதலாவது வெற்றிவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் என்றுநம்பப்பட்டது. ஆனால் அங்கு வெளியான முடிவுகளின்படி வலது சாரி ரிப்பப்ளிக்கன் தலைமை வேட்பாளர் Renaud Muselier மீண்டும் அதிகாரத்தைப் பிடித்துள்ளார்.
நாட்டின் முக்கிய வலதுசாரி அரசியல் தலைவர்களில் ஒருவராக வளர்ந்து வருகின்ற ரிப்பப்ளிக்கன் கட்சிப் பிரமுகர் சேவியர் பெர்ட்ரான்ட் (Xavier Bertrand)முக்கிய பிராந்தியமான Hauts-de-Franceசபையின் தலைவராக மீண்டும் பெருவெற்றி பெற்றுள்ளார். அவர் ஏற்கனவே கூறியிருந்தவாறு இந்த வெற்றி அவரது அதிபர் தேர்தல் பிரவேசத்துக்கான வழியைத் திறந்துவிட்டுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.