ஐக்கிய நாடுகள் சபை 29 வது தடவையாக கியூபாவின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கும்படி அமெரிக்காவைக் கோரியிருக்கிறது.
தனது தேர்தல் உறுதிமொழியாக ஜோ பைடன் அமெரிக்காவின் கியூபா – அரசியல் கையாளல்களை மாற்றுவதாகக் குறிப்பிட்டிருந்தார். டொனால்ட் டிரம்ப் போட்ட புதிய கட்டுப்பாடுகள் உட்படத் துளி கூட இதுவரை எதுவுமே மாற்றப்படவில்லை. 29 வது வருடமாக இம்முறையும் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தனது கியூபா மீதான கட்டுப்பாடுகளைக் கைவிடவேண்டுமென்று கோரி முடிவெடுத்தது.
184 நாடுகள் கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் நிறுத்தப்படவேண்டுமென்ற தீர்மானத்தை ஆதரிக்க எதிராக இரண்டே நாடுகள் வாக்களித்தன. மூன்று நாடுகள் வாக்களிக்காமல் தவிர்த்தன.
அறுபது வருடங்களாகக் கியூபாவின் மீது அமெரிக்கா போட்டிருக்கும் வெவ்வேறு தடைகளில் எண்ணிக்கையால் அதிகரித்தே வந்திருக்கின்றன. 1992 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஐக்கிய நாடுகள் சபை அவைகளைக் கண்டிக்கும் தீர்மானத்தை எடுத்துவருகின்றது எந்தவிதப் பயனுமின்றி.
கியூபா மனித உரிமைகளை மீறுவதாகக் குறிப்பிட்டு அமெரிக்கா தொடர்ந்தும் வாதிடுகிறது. அமெரிக்காவில் கறுப்பின மக்களின் நிலைமை, சவூதி அரேபியாவுக்கு அமெரிக்கா கொடுத்துவரும் ஆதரவு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவின் மனித உரிமைகள் மீறலுக்கு அவைகள் உதாரணங்கள் என்கிறது கியூபா.
ஏற்கனவே வளர்ந்திருந்த தடைகளுக்கு மேலாக மேலும் 240 புதிய தடைகளை டொனால்ட் டிரம்ப் தனது ஆட்சிக்காலத்தில் போட்டார். அவைகளிலொன்று அமெரிக்காவில் வாழும் கியூபாவைப் பின்னணியாகக் கொண்டவர்கள் தமது உறவினர்களுக்கும் பணம் அனுப்பி உதவுவதைத் தடை செய்ததாகும். அதன் மூலம் ஒபாமா காலத்தில் கியூபாவை நெருங்க ஆரம்பித்திருந்த அமெரிக்காவின் அரசியல் மேலும் கடுமையாக்கப்பட்டது.
கொரோனாத் தொற்றுக்கள் உட்பட மேலும் பல முக்கிய சர்வதேச அரசியல் விடயங்களால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் ஜோ பைடனுக்கு கியூபா பற்றிய அரசியல் நகர்வுகளில் ஈடுபட இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. ஐ.நா போட்ட கண்டிப்புத் தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்காவுக்குச் சார்பாக வாக்களித்த ஒரேயொரு நாடு இஸ்ராயேல் மட்டுமே.
சாள்ஸ் ஜெ. போமன்