லண்டன் நகரின் ரயில் நிலையக் கட்டடத்தின் கீழே மோசமான தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது.
திங்களன்று பிற்பகலில் லண்டனின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எலிபண்ட் அண்ட் காசில் கட்டடத்தின் கீழே ஏற்பட்ட தீவிபத்தால் எழுந்த பெரும் தீப்பிழம்பு மேல் நோக்கி வெடித்தெரிவதாகக் குறிப்பிடப்படுகிறது. மிகவும் தூரத்திலிருந்து பார்க்கும்போது தீப்பிழம்புகளும், பெரும் புகை மண்டலமும் அந்தக் கட்டடங்களிலிருந்து எழுவதாகச் சாட்சிகள் குறிப்பிடுகின்றனர்.
பலர் குடியிருக்கும் பிராந்தியங்கள் அதைச் சுற்றியிருப்பதால் அப்பகுதி மக்களிடையே அத்தீயின் விளைவு என்னாகுமோ என்ற திகில் எழுந்திருக்கிறது. அருகிலிருந்த கார் திருத்தும் நிலையத்தில் நான்கு கார்களில் முதல் கட்டமாகத் தீப்பிடித்ததாகச் சிலர் குறிப்பிடுகிறார்கள்.
நான்கு தீயணைப்பு இயந்திரங்களும், நூறு தீயணைப்பு வீரர்களும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் பெருமுயற்சி எடுத்து வருவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. தீயை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாகவே தீயணைப்புப் படையினர் தெரிவிக்கிறார்கள். ரயில் நிலையத்துக்குக் கீழிருக்கும் வியாபார நிறுவனங்களெல்லாம் எரிந்துவிட்டதாகவும் பல கார்கள் எரிந்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்