சர்வதேச உதைபந்தாட்டக் கிண்ணப் போட்டியொன்றின் மிகப்பெரும் தவறைச் செய்த பின்னரும் வெற்றிபெற்றது ஸ்பெய்ன்.
தனது குழுவைச் சேர்ந்த ஒருவர் கிரவேஷியாவிடமிருந்து பறித்த பந்தைத் தன்னை நோக்கித் தூரத்திலிருந்து மெதுவாக உருட்டிவிட அதை அலட்சியமாகத் தட்டிவிட்டார் ஸ்பெய்னின் வலை காப்பாளர். பந்து உள்ளே போக மோதல் ஆரம்பித்த 20 வது நிமிடத்தில் கிரவேஷியா 1 – 0 ஐப் பெற்றுவிட்டது.
2018 இல் உலகக் கிண்ணத்துக்கான போட்டியில் வெள்ளிக் கோப்பையை வென்ற கிரவேஷியக் குழு அதேயளவு திறமையை இதுவரை நடந்த போட்டிகளில் காட்டவில்லை. ஸ்பெய்னுக்கு எதிராகவும் அவர்களது விளையாட்டுப் பலவீனமாகவே இருந்தது. விளையாடிய பெருமளவு நேரத்தில் ஸ்பெய்ன் ஒரு படி திறமையாகவே இருந்ததைக் காணமுடிந்தது.
விரைவிலேயே 1- 1 ஐ பப்லோ சரபியாவும், 2 – 1 ஐ செஸார் அஸ்பிலிகியுட்டா போட தொர்ரேஸ் ஸ்பெய்னின் நிலையை 3 – 1 ஆக்கினார். அதன் பின்பு தான் விழித்தெழுந்தது கிரவேஷியக் குழு. 85, 92 வது நிமிடங்களில் கிரவேஷியர்கள் இரண்டு தடவை ஸ்பெய்னின் வலைக்குள் பந்தை அடித்துவிட விளையாட்டின் 90 நிமிடங்கள் முடிந்தபோது 3 – 3 என்று ஆகிவிட்டது. எனவே மேலதிக நேரம் தொடரவேண்டியதாகியது.
ஸ்பெய்னின் மிகவும் விமர்சிக்கப்பட்ட அல்வாரோ மொராட்டா 100 வது நிமிடத்தில் 4 – 3 கோலைப் போட்டார். நடந்த மோதல்களில் பல தவறுகளை விட்டதால் விமர்சிக்கப்பட்டதை விட, குடும்பத்துடன் பல தடவைகள் மிரட்டல்களையும் எதிர் நோக்கவேண்டிவந்திருந்தது மொராட்டாவுக்கு. அவைகளுக்கெல்லாம் பதில் சொல்லுவது போல ஸ்பெய்னின் வெற்றிக்கான 4 – 3 ஐப் போட்டது அவருக்கு மிகப்பெரும் ஆறுதலாக இருந்ததைக் காணமுடிந்தது.
அதையடுத்து மிக்கேல் ஒயார்ஸபெல் 5 – 3 என்று ஸ்பெய்னின் கடைசி இலக்கத்தை நிறைவு செய்ய மோதல் முடிவடைய கிரவேஷியாவின் ஐரோப்பியக் கிண்ணக் கனவு கலைந்துவிட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்