1938 ஆண்டுக்குப் பின்பு முதல் முறையாக ஒரு சர்வதேசக் காலிறுதிப் போட்டிக்கு நுழைந்திருக்கிறது சுவிஸ்.
யூரோ 2021 மோதல்களில் கோல்கள் மழையாகக் கொட்டிய மாலையாகியது திங்கள் கிழமை. ஸ்பெய்ன் – கிரவேஷிய மோதலில் 8 கோல்கள் போடப்பட்டன. உலகக் கிண்ண வீரர்களான பிரான்ஸுக்கு எதிராக விளையாட ஆரம்பித்த சுவிஸ் தாம் ஒரு சமமான எதிரிகளென்பதைச் சொல்ல ஆரம்பித்தது. மோதலில் முதலாவது தடவை வலைக்குள் பந்தைப் போட்ட ஹரிஸ் செபரோவிச் சுவிஸை 1 – 0 ஐக் கொடுத்தார்.
இரண்டாவது பகுதி ஆட்டம் ஆரம்பமாகிப் பத்தே நிமிடத்தில் பிரான்ஸுக்கு எதிராக சுவிஸுக்குக் கிடைத்த தண்டனையில் மேலுமொரு இலக்கத்தைச் சேர்க்க விடாமல் தடுத்துவிட்டார் பிரான்ஸின் வலையைக் காத்த ஹூகோ லியோரிஸ். அதையடுத்து பிரான்ஸ் வீறுகொண்டெழுந்து மோதலைத் தன்வசமாக்க ஆரம்பித்தது.
57 ம் 59 ம் நிமிடங்களில் பிரான்ஸின் கரீம் பென்சிமா இரண்டு தடவைகள் சுவிஸ் வலைக்குள் பந்தைப் போட்டு 2 – 1 என்று விளையாட்டை மாற்றினார். அவரைவிட அதிவேகமாக ஐரோப்பிய மோதலொன்றில் இரண்டு தடவை மிகக்குறைந்த நேர இடைவெளிக்குள் கோல்களைப் போட்டவர் சுவீடனின் ஹென்ரிக் லார்சன் [1992]. மீண்டுமொரு அழகான கோலைப் போட்டார் பொக்பா. பிரான்ஸ் 3 – 1. அத்துடன் மோதல் முடிந்துவிட்டது என்றே நினைக்கவைத்தது அவ்விரு அணிகளுக்கும் இடையேயான மோதல்.
சுவிஸ் வீரர்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று எண்ணக்கூடிய விதமாக மாறியது மோதல். ஆனால், திடீரென்று 81 வது நிமிடத்தில் ஹரிஸ் செபரோவிச் தலையால் குத்திய பந்து சுவிஸுக்கு 2 – 3 என்ற நம்பிக்கை கோலைக் கொடுத்தது. வேகம் வந்து மேலும் தாக்கிய சுவிஸ் குழு 90 வது நிமிடத்தில் மாரியோ கவ்ரானோவிச் சுவிஸின் 3 – 3 என்ற இலக்கத்தைக் கொடுத்தார்.
மோதல் நீட்டப்பட்டது, ஆனால் இந்த யூரோ போட்டியில் முதலாவது தடவையான வலைக்காப்பாளர்களின் விளையாட்டாகியது. இரண்டு நாட்டு வீரர்களும் வலைக்கருகே பந்தை வைத்து உதைக்க ஒன்பது தடவைகள் பந்துகள் வலைக்குள் போடப்பட்டன. பிரான்ஸின் ஷீலியன் ம்ப்பெப்பேயின் பந்து வந்தபோது சுவிஸ் வலைக்காப்பாளர் யன் சம்மர் தவறாமல் பிடித்துவிட்டார்.
83 வருடங்களாக சுவிஸ் உதைபந்தாட்டக்குழுக்கள் சர்வதேச அளவில் செய்யாததை இவ்வருட வீரர்கள் செய்தார்கள். காலிறுதிப் போட்டியில் அவர்கள் ஸ்பெய்னை வெள்ளியன்று மாலை எதிர்கொள்வார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்