கடைசியான காலிறுதி மோதலுக்காக உக்ரேனும், இங்கிலாந்து அணிகள் தயாராகின்றன.
மூன்று நாட்களில் யூரோ 2020 கிண்ணத்தை வெல்லக்கூடியவர்கள் என்று நம்பப்பட்ட மூன்று ஜாம்பவான்கள் போட்டியிலிருந்து வீழ்த்தப்பட்டு விட்டார்கள். நெதர்லாந்து, போர்த்துக்கலுக்கு அடுத்தபடியாக புதனன்றுஜேர்மனி 2 – 0 என்ற இலக்கத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. பொதுவாகவே போட்டிகள் முன்னோக்கி நகரும்போது தமது திறமையைக் காட்டுபவர்கள் ஜேர்மனி வீரர்கள் என்ற குமிழி வெம்பிளி அரங்கில் வெடித்துச் சிதறியது.
ஜோக்கிம் லூ தனது குழுவினரின் 2018 உலகக் கிண்ணத்துக்கான தோல்விக்குப் பின்னர் பெற்ற இரண்டாவது நம்பிக்கை யூரோ 2020 ஆகும். அதேபோலவே 2018 தோல்விக்குப் பின்னர் குழுவிலிருந்து விடுவிக்கப்பட்ட தோமஸ் மொல்லரை இப்போட்டிகளுக்காகத் திரும்பவும் தனது அணியில் சேர்த்துக்கொண்டார் ஜோக்கிம் லூ தான் ஜேர்மன் குழுவின் இயக்குனர் கதிரையிலிருந்து விடுபடமுன்னர். ஜேர்மன் குழுவினரோ இப்போட்டிகளில் உதைபந்தாட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குக்களுக்குத் தீனி போடவில்லை. தனது அணிக்காக 39 தடவைகள் எதிராளியின் வலைக்குள் பந்தை உதைத்துத் தள்ளிய தோமஸ் மொல்லர் 81 வது நிமிடத்தில் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்த முடியவில்லை. இங்கிலாந்தின் ரஹீம் ஸ்டெர்லிங், ஹரி கேன் ஆளுக்கொரு தடவை பந்தை ஜேர்மனியின் வலைக்குள் அடிக்க ஜேர்மனியின் கனவு தவிடுபொடியானது.
கிளாஸ்கோவில் நடந்த அடுத்த மோதலில் நீலம் – மஞ்சள் அணிகளிரண்டு தமக்குள் மோதிக்கொண்டன.ஏழு புள்ளிகள் பெற்று E குழுவின் முதலிடத்திலிருந்த சுவீடன் C குழுவின் மூன்றாவது இடத்தில் மூன்றே புள்ளிகளுடனிருந்த உக்ரேனை எதிர்கொண்டபோது சுவீடன் வெல்லுமென்றே பலரால் நம்பப்பட்டது. மோதலின் போதும் சுவீடன் அணியே பெரும்பாலும் பந்தை விளையாடிக்கொண்டிருந்தது.
இடையிடையே அதிரடியாகத் திருப்பித் தாக்கிக்கொண்டிருந்தது உக்ரேன் குழு. அவர்களுடையே ஒவ்வொரு தாக்குதல்களும் கூர்மையானவையாக இருந்தன. ஒலெக்ஸாந்தர் ஸிஞ்செங்கோ 27 வது நிமிடத்தில் அப்படியான ஒரு தாக்குதலின்போது தனது உக்ரேனுக்கு 1 – 0 என்ற இலக்கத்தைக் கொடுத்தார். அரைப்பகுதி விளையாட்டின் முன்னர் சுவீடனின் எமில் போஸ்பெர்க் 1- 1 என்று பதில் கொடுத்தார்.
இரண்டாவது பகுதி விளையாட்டு ஆரம்பித்தபோது இரண்டு அணிகளுமே சமமாகவே மோதல் முடிவடையப்போகிறது என்ற எண்ணத்திலிருந்ததாகத் தெரிந்தது. பல தடவைகள் இரண்டு அணியின் வீரர்களும் உடலால் மோதிக்கொண்டு வேதனையுடன் விழுந்து உருண்டார்கள், மாற்றப்பட்டார்கள். எதிர்பார்த்தது போலவே விளையாட்டு 15 + 15 நிமிடங்களால் நீட்டப்பட்டது. இதுவரை எந்த ஒரு மோதலிலும் நடக்காத அளவுக்கு வீரர்கள் காயமடைந்தார்கள்.
சுவீடனின் மார்க்கஸ் டேனியல்சன் உக்ரேனின் ஆர்த்தெம் பசெடினிடமிருந்த பந்தைக் கீழே விழுந்தபடி காலால் தடுக்க முற்பட அவரது கால் பசெடினின் முழங்காலுக்குக் கீழான பாகத்தைக் கடுமையாகத் தாக்க மோதலின் மோசமான விபத்து உண்டாகியது. தண்டமாக டேனியல்சன் வெளியே அனுப்பப்பட ஒரு வீரர் குறைவானது சுவீடனுக்கு விளையாட்டுக்கு. மேலும் மோதல்கள், விபத்துக்கள் தொடர்ந்தன. நீட்டப்பட்ட மோதல் நேரமும் முடியும் கடைசி நிமிடத்தில் – 120 வது நிமிடத்தில் ஸிஞ்செங்கோவின் உதவியுடன் தலையால் குத்திப் பந்தைச் சுவீடனின் வலைக்குள் போட்டார் உக்ரேனிய வீரர் ஆர்த்தெம் டொவிக். 2 – 1 என்று மோதல் முடிவடைய, உக்ரேன் தான் இங்கிலாந்தைக் காலிறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் என்றானது.
சாள்ஸ் ஜெ. போமன்