திகிராய் மாநிலத்தில் தாம் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டதாக தனிநாடு கோரிவரும் இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எட்டு மாதங்களாக எத்தியோப்பிய அரசு தனது நாட்டிலிருந்து பிரிய முற்பட்ட மாநிலமான திகிராய் மீது இராணுவத்தை ஏவி விட்டது. அராஜகங்களுடன் நடாத்தப்பட்ட கடும்போர் பற்றிய பல செய்திகள் வந்துகொண்டிருந்தன. திகிராய் தனது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக எத்தியோப்பிய அரசு குறிப்பிட்டு வந்தது. அந்த மா நிலத்தின் ஆட்சி நடாத்திவந்த TPLF  கட்சியினர் திகிராயை விட்டு ஓடிப்போயிருந்தார்கள்.

https://vetrinadai.com/news/eritrea-tigray/

திடீரென்று நிலைமை மாறியிருக்கிறது. திங்களன்று திகிராயின் ஆளும் கட்சியினர் மீண்டும் மாநிலம் தங்களுடைய கைவசத்திலிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். எட்டு மாதப் போருக்குப் பின்னர் மாநிலத் தலைநகரான மெக்கெல முழுசாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதேசமயம், எத்தியோப்பிய அரசு தனது பங்குக்கு திகிராய் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு போர் நிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது.

மெக்கெல நகரைவிட்டு எத்தியோப்பிய இராணுவம் வெளியேறியதாகப் பல சாட்சிகள் தெரிவித்திருக்கின்றன. போக முன்பு இராணுவத்தினர் ஐ.நா – வின் அலுவலங்கள் உட்படப் பல இடங்களைக் கொள்ளையடித்து அழித்துவிட்டுச் சென்றதாகக் குடிமக்கள் தெரிவிக்கிறார்கள். 

நாட்டில் தற்போது விவசாய நாற்று நடும் சமயமென்றும், பயிர்கள் அறுவடை செய்யப்படும் வரை எத்தியோப்பிய அரசு போர் நிறுத்தத்தைத் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. திகிராய் மாநில ஆளும் கட்சியினரோ தமது பிராந்தியத்திலிருக்கும் எதிரியின் படைகள் முற்றாக அகலும்வரை அவர்களைத் தாக்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

எத்தியோப்பிய ஜனாதிபதி அபிய் அஹமத்துடன் தான் தொலைபேசியில் பேசியதாக ஐ.நா-வின் பொதுக் காரியதரிசி அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்திருக்கிறார். நீண்ட காலத்தின் பின்னர் எத்தியோப்பியாவில் அமைதி உண்டாகும் நிலைமை தோன்றியிருப்பதாக தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *