பத்து நாள்களுக்கு சிறீலங்கா முடக்கம்- கோவிட் 19 தொற்றின் பரவல் அதிகரித்துக்கொண்டே போகிறது
அதிகரித்துச்செல்லும் கோவிட் 19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில், நாடுமுழுவதும் வரும் பத்து நாள்களுக்கு முடக்குவதற்கு தீர்மானித்து சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே பலவாரங்களாக நாட்டை முற்றுமுழுதாக முடக்குவதற்கு பின்னடித்துவந்த சிறீலங்கா ஜனாதிபதி, நாட்டில் அதிகரிக்கும் பெருந்தொற்றையும் மரணங்களையும் தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த முடிவை எட்டியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆவணிமாதம் 30ம் திகதி அதிகாலை வரை இந்த பொதுமுடக்கம் இருக்கும் என அந்த நாட்டின் சுகாதரதுறை அமைச்சர் கெகலிய றம்புக்வெல அறிவித்துள்ளார்.அத்தியாவசிய சேவைகள் சார்ந்த துறையினர் தொடர்ச்சியாக பணிகளை செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நாட்டுமக்களுக்கு விசேட உரையாற்றிய சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய,எதிர்காலத்தில் முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய செயலாற்ற மக்கள் தயாராகவேண்டும் எனவும் வலியுறுத்திக்கூறியிருந்தார். எனினும் இதுவரை காலமும் தொற்று அதிகரித்த சூழ்நிலையில் ஜனாதிபதியும் அரசும் சரியான நடவடிக்கைகளை எடுக்காதது குறித்து பல விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
நேற்று வெளியாகிய அறிவிப்பில் மட்டும் மொத்தம் 3835பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கும் அதேவேளை மொத்தமாக 195பேரை கோவிட்19 காவுகொண்டுள்ளது.இந்த எண்ணிக்கையுடன் மொத்தமாக 6985 கோவிட் 19 இன் மரணங்கள் சம்பவித்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.