“அமெரிக்கா தனது கிருமி ஆராய்வு மையமொன்றை கொரோனாக் கிருமியின் மூலத்தைக் கண்டுபிடிப்பதற்காகத் திறக்குமா?”
ஜோ பைடன் தனது நாட்டின் உளவு நிறுவனத்திடம் கேட்டிருந்தபடி கொரோனா கிருமிகளின் பரவலின் ஆரம்பம் பற்றிய ஒரு அறிக்கையை அவர்கள் தயாரித்திருக்கிறார்கள். அந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியாக முன்னரே அதுபற்றி வாய்ச்சண்டை சீனாவுக்கும் – அமெரிக்காவுக்கும் ஆரம்பித்துவிட்டது.
அமெரிக்க உளவு அமைப்பின் அறிக்கையின்படி வுஹானிலிருக்கும் ஆராய்ச்சி மையத்திலிருக்கும் பாதுகாப்புக்களின் பலவீனமொன்றின் வழியேதான் குறிப்பிட்ட கிருமிகள் வெளியேறி மனிதர்களிடையே பரவ ஆரம்பித்திருக்கலாம் என்கிறது. உளவு அமைப்பின் அறிக்கை ஜோ பைடனிடம் கையளிக்கப்பட்டது. அதிலிருக்கும் பதிலோ வெட்டு ஒன்று துண்டிரண்டாக இல்லை.
அவ்வறிக்கையிலிருக்கும் விபரங்கள் செவ்வாயன்று வெளியானவுடனேயே வாஷிங்டனிலிருக்கும் சீனத் தூதுவராலயம் பகிரங்கமாக ‘அமெரிக்கா தனது கிருமி ஆராய்ச்சி நிலையமொன்றைத் திறந்து அங்கே கொரோனாக் கிருமிகள் ஆரம்பித்தனவா என்று ஆராய உலகுக்கு வழிவிடுமா?’ என்று சவால் விட்டிருக்கிறது.
நிலைமையில் ஏற்பட்டிருக்கும் இடியாப்பச் சிக்கலைக் கையாளும் விதமாக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு உலக நாடுகள் கொரோனாப் பரவலின் ஆரம்பக் காலத்தில் அவர்களுடைய நாட்டு ஆராய்ச்சி மையங்களில் சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரிகளைத் தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அதுபற்றி உலக நாடுகள் இன்னும் பதில் சொல்லவில்லை. சீனாவோ தொடர்ந்தும் அக்கிருமிப் பரவல் தொடங்கிய இடமான வுஹான் கிருமிகள் ஆராய்ச்சி மையத்திலிருக்கும் ஆரம்பகால நோயாளிகளின் இரத்த மாதிரிகளை ஆராய்ச்சிக்காகக் கையளிக்க மறுத்து வருகிறது.
அதே சமயம் சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ் தனது வாசகர்களிடம் மில்லியன் கணக்கில் கையெழுத்துக்களைச் சேகரித்து அமெரிக்காவின் இராணுவ மருத்துவ ஆராய்ச்சி நிலையமொன்றில் கொரோனாக் கிருமிகளுக்கான மூலம் இருக்கிறதா என்று ஆராயவேண்டும் என்று கோருகிறது. அமெரிக்காவில் அப்படியான ஆராய்வை நடக்கவேண்டுமென்று இதுவரை சர்வதேச விஞ்ஞானிகள் எவரும் கோரியதில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்