இதுவரையில் காணாத மோசமான ஐந்தாவது கொரோனா அலை ஈரான் நாட்டவர்களை வாட்டுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளிலேயே கொரோனாத் தாக்குதல்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நாடு ஈரான் எனலாம். ஏற்கனவே அவ்வியாதியால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சம் என்கிறது அதிகாரபூர்வமான செய்தி. தினசரி சுமார் 600 பேரின் உயிரைக் குடித்து வருகிறது ஐந்தாவது அலையாகத் தாக்கிவரும் கொவிட் 19.
ஐந்து நிமிடத்துக்கு ஒரு ஈரானியர் உயிரிழந்துவரும் சமயத்திலும் அரசு அமெரிக்க, பிரிட்டிஷ் தடுப்பூசிகளெதையும் பாவிக்க மறுத்து வருகிறது. சுமார் 83 மில்லியன் குடிமக்களைக் கொண்ட ஈரானில் 5 மில்லியன் பேருக்கே இரண்டு தடுப்பு மருந்துகளையும் கொடுத்திருக்கிறது அரசு. வாரத்துக்கு அரை மில்லியன் பேர் கொரோனாத் தொற்றுக்களுக்கு ஆளாகிறார்கள்.
உள்நாட்டுத் தடுப்பு மருந்தான COVIran Barekat இல்மட்டுமே ஈரானிய அரசு தங்கியிருக்கிறது. தேவையான அளவு தடுப்பு மருந்தை நாட்டில் தயாரிக்க முடியவில்லை. அத்துடன் அந்தத் தடுப்பு மருந்தைப் பற்றிய விபரங்களெதையும் அரசு விபரமாக வெளியிடவும் மறுத்து வருகிறது. அரசின் மீது மக்களுக்குப் பெரும்பாலும் நம்பிக்கையில்லாத ஈரானில் அத் தடுப்பு மருந்து பற்றிய அச்சங்களும் நிலவுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பெருமளவில் குவிவதாலும், அவர்களைக் கையாள வசதிகள் போதாமையாலும் ஈரானின் மருத்துவ சேவை செயலிழந்துவிடும் நிலைமை உண்டாகியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
வெளிநாட்டுத் தடுப்பு மருந்துகள் “நம்பிக்கையில்லாதவை, ஈரானியர்களுக்கு ஆபத்தானவை,” என்று தடுத்திருந்த ஈரானின் ஜனாதிபதியும் ஆன்மீகத் தலைவரும் சமீபத்தில் உடனடியாக தடுப்பு மருந்துகளை வெளிநாட்டில் இருந்தாவது பெறுவதற்கான நிதிவசதிகளை ஒதுக்கும்படி உத்தரவிட்டிருக்கின்றார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்