அடுத்த வாரமுதல் கிரீஸில் தடுப்பூசி போடாத மருத்துவ சேவையாளர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்படுவார்கள்.
கொரோனாத் தொற்றுக்களைக் கட்டுப்படுத்த கிரீஸ் எடுத்திருக்கும் அடுத்த நடவடிக்கை நாட்டின் மருத்துவசாலைகளின் ஊழியர்கள் தடுப்பூசி போடாவிட்டால் வேலைத்தளத்தில் அனுமதி மறுக்கப்படுவார்கள் எனபதாகும். மருத்துவ சேவையிலிருக்கும் சுமார் 20,000 பேர் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
கிரீஸின் சனத்தொகையில் பாதிப்பேர் ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். மற்றைய நாடுகள் போலவே அதைப் போட்டுக்கொள்ள மறுத்து வருபவர்களும், தடுப்பூசிக் கட்டாயத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் கிரீஸிலும் உண்டு. சுற்றுலாத் துறையில் பெருமளவு தங்கியிருக்கும் கிரீஸில் சமீப காலத்தில் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. தினசரி பத்துப் பேராவது கொவிட் 19 ஆல் இறந்துவருகிறார்கள்.
அதே போன்றே, மற்றைய துறைகளின் வேலைத் தளங்களிலும் தடுப்பூசி போட்டிருப்பதைக் கட்டாயமாக்கும் அழுத்தத்தை அரசு கொடுத்து வருகிறது.மற்றைய துறைகளில் வேலை செய்பவர்களுக்கு இதுவரை அரசு இலவசமாக வாரத்தில் கொரோனாப் பரிசோதனைக்கு ஒழுங்கு செய்திருந்தது. அவர்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய அந்தப் பரிசோதனைகள் இனிமேல் கட்டணத்துக்கு உள்ளாகுமென்று அரசு அறிவித்திருக்கிறது.
தவறணைகள், உணவு விடுதிகளில் தடுப்பூசிகள் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடு விரைவில் அமுலுக்கு வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்