தடுப்பு மருந்துடன் சம்பந்தப்பட்ட முதலாவது மரணம், நியூசிலாந்தில்.
ஆறு மாதங்களாக கொரோனாத் தொற்றுக்கள் எதுவுமில்லாமலிருந்த நாடு நியூசிலாந்து. நாட்டின் எல்லைகளைப் பெரும்பாலும் மூடியை வைத்திருந்த நியூசிலாந்துக்குக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆஸ்ரேலியாவிலிருந்து திரும்பி வந்த ஒருவருக்குத் தனிமைப்படுத்தலுக்குப் பின்னரும் தொற்று ஏற்பட்டிருந்தது. அது நாட்டில் சமூகப் பரவலாகிவிட்டிருப்பதால் சில நாட்களாகவே அங்கே பொது முடக்கம் அமுலிலிருக்கிறது.
அச்சமயத்தில் தடுப்பு மருந்தின் பக்கவிளைவினால் நியூசிலாந்தின் முதலாவது இறப்பு ஏற்பட்டிருக்கிறது.myocarditis எனப்படும் இருதயத் தசைநார்கள் தடுப்பு மருந்து போட்டதால் வீங்கிவிடும் வியாதி ஏற்பட்டு அதன் விளைவுகளால் ஒருவர் இறந்திருக்கிறார்.
குறிப்பிட்ட பக்க விளைவு பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தால் மிக மிக அரிதாக ஏற்படலாம் என்பது ஏற்கனவே அறியப்பட்டிருக்கிறது. ஆனாலும், கொவிட் 19 க்கு எதிராக உலகளவில் சாதாரணமான பாவிப்புக்கு அங்கீகரிக்கப்பட்டிருக்கும் அத்தடுப்பு மருந்தின் நன்மைகள் அது மிக மிக அரிதாகக் கொடுக்கக்கூடிய பக்க விளைவுகளை விட மேன்மையானவை என்று குறிப்பிடப்படுகிறது.
டெல்டா திரிபே நியூசிலாந்தை அதிரடியாகத் தாக்கி சமீப வாரத்திலிருந்து தொற்றியவர்கள் எண்ணிக்கையை உயர்த்திவருகிறது. இப்போது தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 562 ஆகும்.
சாள்ஸ் ஜெ. போமன்