புகைப்பவர்களுக்குச் செலவு மேலும் அதிகரிக்கும்படியான புதிய சட்டங்கள் சுவீடனில் அறிமுகமாகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரைமுறைகள் ஒன்றான “தயாரிப்பாளரே குப்பைக்கான செலவுகளை ஏற்கவேண்டும்” என்பதை இவ்வருட இறுதியிலிருந்து புகைத்தல் மற்றும் புகையிலைப் பொருட்கள் மற்றும் சிறுதீனிகள் அடைத்துவரும் காகிதங்கள் மீதும் நடைமுறைப்படுத்தவிருக்கிறது சுவீடன். அதன் விளைவு கடைசியில் அச்செலவு நுகர்வோரின் மீதே தயாரிப்பாளர்களால் போடப்படும். அதாவது விலைகள் உயரும்.
அதேசமயம் நாடெங்கும் குப்பை போடுகிறவர்கள் மீதான தண்டம் சுமார் 80 டொலர்களாக உயர்த்தப்படும். அதாவது புகைத்துவிட்டு சிகரட் கட்டையைப் பொது இடத்தில் போடும் ஒருவர் மீது அக்கட்டணம் விதிக்கப்படலாம்.
தயாரிப்பாளர்கள் தமது பொருட்கள் மீதான சூழலுக்கான பொறுப்பையும் எடுக்கவேண்டுமென்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வரைமுறையின் எண்ணமாகும். அதன் மூலம் அவர்கள் தங்களது பொருட்களை அடைப்பதற்காகப் பாவிக்கும் ஏதனங்களை சூழலைப் பாதிக்காதவையாக மாற்ற வேண்டும். பாவனையாளர்கள் சூழலைக் குப்பையாக்குவதற்கான செலவுகளைப் பொறுப்பெடுக்கவேண்டும். பாவனைக்குள்ளாகாத பொருட்கள் அனைத்தும் முடிந்தவரை சுற்றுப்புற சூழலை அழுக்காக்காத வகையில் மீள்பாவிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.
எதிர்காலத்தில் குப்பைகளைக் கையாள்வதற்கான செலவு அதன் தயாரிப்பாளர்களை- அதன் மூலம் – நுகர்வோரையே அடையும். ஐரோப்பிய ஒன்றியத்தின் வரைமுறையை அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான சட்டங்கள் மூலம் செயற்படுத்தலாம்.
சுவீடனில் கொண்டுவரப்படவிருக்கும் சட்டத்துக்காக ஒரு வாரத்தில் நாட்டின் இயற்கையில் போடப்படும் சிறு குப்பைகள் எண்ணப்பட்டன. அவைகளின் மொத்த எண்ணிக்கை 35 மில்லியன் ஆகும். அவற்றில் பெரும்பாலானவை சிகரட் கட்டைகளே. அவைகளின் எண்ணிக்கை மட்டும் 22 மில்லியன். மற்றைய புகையிலைப் பொருட்கள் சம்பந்தப்பட்ட குப்பைகளும் பெருமளவிலேயே இருந்தன.
ஒவ்வொரு சிகரட்டின் கட்டையையும் எண்ணும் முறையை நாட்டின் சிகரட் தயாரிப்பாளர்கள் எதிர்க்கிறார்கள். குப்பைகளை எடைக்கேற்ப நிறுக்கவேண்டுமென்பது அவர்களின் கோரிக்கை. ஆனால், அரசு ஒவ்வொரு சிகரட்டாலும் ஏற்படும் சூழல் சேதத்தைக் கணக்கிட்டே அவைகளின் மீதான கட்டணத்தை உயர்த்தவிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்