கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கின்னஸ் சாதனை
உலகப்பிரபல்யம் வாய்ந்த போர்த்துக்கல் நாட்டின் உதைபந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேசப்போட்டிகளில் அதிக கோல்களை அடித்தவீரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முந்திக்கொண்டார். போர்த்துக்கல் நாட்டின் அல்கார்வ் மைதானத்தில் கடந்த செப்ரெம்பர் மாதம் 1ம்திகதி அயர்லாந்துடன் போர்த்துக்கல் மோதிய போட்டியில் கோல் அடித்ததன் மூலம் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஈரானிய வீரர் அலி டேய் இன் சாதனையான 109 கோல்களை சமப்படுத்தியபடி களமிறங்கிய ரொனால்டோ அன்றைய போட்டியில் அடித்த 2 கோல்களுடன், சர்வதேசப்போட்டியில் மொத்தமாக 111 கோல்களை அடித்தவராக சாதனைவீரரானார்.
இதன் மூலம் உலகிலேயே சர்வதேசப்போட்டிகளில் அதிக கோல்களை அடித்த ஆண் என்ற கின்னஸ் சாதனை சான்றிதழ் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களிலும் அதிகூடுதலான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விளையாட்டுவீரர் என்ற பெருமையைக்கொண்ட ரொனால்டோ இந்த சாதனை இன்னும் உற்சாக்கத்தை ஏற்படுத்துவதாக பதிவுசெய்துள்ளார். இந்த சாதனை கோல்களின் எண்ணிக்கையை அதிக இலக்கமாக்க தொடரும் போட்டிகளில் முயற்சி செய்யலாம் என்று தனது இன்ஸ்டகிறாம் பக்கத்தில் ரசிகர்கர்களுடன் பகிர்ந்துள்ளார்.
ஏற்கனவே சாதனையை நிலைநாட்டிய ஈரானின் அலி டேய் தற்சமயம் சர்வதேசப்போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்று பயிற்சியாளராக பணியாற்றுவதனாலும், தொடர்ந்தும் ரொனால்டோ களத்தில் விளையாடி வருவதனாலும் இந்த சாதனை மிகவும் உச்ச எண்ணிக்கையில் நிறைவடைய வாய்ப்புக்கள் உள்ளதாகவே விளையாட்டு ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.