போலந்து – பெலாரூஸ் எல்லையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.
பெலாரூஸ் அரசு திட்டமிட்டுத் தொடர்ந்தும் போலந்து எல்லைக்கூடாக அகதிகளை அனுப்ப முயற்சிக்கிறது என்று குற்றஞ்சாட்டுகிறது போலந்து. அத்துடன் எல்லைக்கு அப்பால் பெலாருஸ் – ரஷ்ய கூட்டு இராணுவப் பயிற்சியான Zapad நடந்து வருகிறது. இரண்டு காரணங்களையும் காட்டி எல்லையில் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்திருக்கிறது போலந்து.
உண்மையான காரணம் போலந்து எல்லைக்கு அப்பால் பெலாரூசிஸிலிருந்து வந்து மாட்டிக்கொண்டிருக்கும் அகதிகளின் நிலைமையை எவரும் காணாமல் மறிக்கவே என்கிறார்கள் பல மனித உரிமைக் குழுக்கள். மாட்டிக்கொண்டவர்களின் உடல்நிலை மோசமாக இருக்கிறது, அவர்களை மீண்டும் பெலாருசுக்குள் விட அந்த நாடும் மறுத்து வருகிறது. எல்லையில் பொலீஸாரும், இராணுவத்தினரும் எல்லையில் பாதுகாப்புக்காக அரசால் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
எல்லைக்கப்பால் காட்டுக்குள்ளிருக்கும் அகதிகளைக் காணாத விதமாகத் திரை போடப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. எல்லைக்காவலர்களும், இராணுவத்தினரும், தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர்களும் மட்டுமே எல்லைக்கப்பால் போய் அகதிகளைச் சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தமக்கு அகதிகள் நிலைபற்றி நிச்சயமான செய்திகள் எதுவும் தெரியாதவாறு அரசு செய்திருக்கிறது என்று குறிப்பிடும் மனித உரிமைக் குழுவினர் அவசரகால நிலைப் பிரகடனத்தால் அந்த இடத்துக்குப் போக முடியாது.
Zapad இராணுவப் பயிற்சி ரஷ்யாவையும், பெலாரூஸையும் ஒரேயடியாக யாராவது தாக்கினால் எப்படி எதிர்கொள்வது என்ற நோக்குடன் 200,000 இராணுவத்தினர் பெலாரூஸில் பயிற்சி செய்வதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், அது வேண்டுமென்றே ஊதி அதிகரிக்கப்பட்ட இலக்கம் என்று கருதப்படுகிறது. 2017 இல் இதே பயிற்சிக்காக 100,000 இராணுவத்தினர் பங்குகொள்வார்கள் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், பாதிப்பேரே அதில் பங்கெடுத்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்